பாகிஸ்தானை பொளந்த தோனியை மறுபடியும் பாக்குறேன்.. இதை நீங்க செஞ்சு தான் ஆகணும்.. கைஃப் கருத்து

Mohammed Kaif
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 3வது போட்டியில் டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியை மறக்கும் அளவுக்கு தோனி பேட்டிங் செய்த விதம் சென்னை ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஏனெனில் விசாகப்பட்டினத்தில் நடந்த அப்போட்டியில் 192 ரன்களை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 3, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் ரகானே 45, டேரில் மிட்சேல் 35, ஜடேஜா 21* ரன்கள் எடுத்துப் போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு மொத்தம் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 4, 6, 0, 4, 0, 6 என 4 பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர் 42 வயதானாலும் கூடவே பிறந்த ஸ்டைல் எப்போதும் மாறாது என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

பழைய தோனி:
இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் பவுலர்களைப் பொளந்து 148 ரன்கள் விளாசி இந்தியாவுக்காக முதல் சதமடித்த ஃபார்மில் தோனி தற்போது இருப்பதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த போட்டிகளில் சற்று மேல் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்து சென்னைக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோனியை கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அவர் ரஞ்சிக்கோப்பை அல்லது கிளப் போட்டிகள் அல்லது இந்தியாவுக்காக விளையாடுவதில்லை. நேரடியாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுகிறார். ஆனால் இன்று பேட்டிங் செய்த விதத்திற்கு 8வது இடம் அவருக்கானதல்ல. அவர் கண்டிப்பாக 4 அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாட வேண்டும். இப்போது ஓரிரு பந்துகளை மட்டுமே விளையாடும் தோனிக்கு 8வது இடம் அதிகம் கீழானது”

- Advertisement -

“எனவே இன்று நாம் பார்த்த ஃபார்முக்கு தோனி முன்னதாகவே வந்து சென்னைக்கு போட்டிகளை வென்று கொடுக்க உதவி செய்ய வேண்டும். டெல்லி பவுலிங் நன்றாக இருந்தது. ரிசப் பண்ட் ஃபார்முக்கு வந்துள்ளார். ஆனால் தோனி தான் விசாகப்பட்டினத்தில் நட்சத்திர ஒளியைப் பெற்றார். தோனி தன்னுடைய கேரியரை விசாகப்பட்டினத்தில் துவங்கினார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சதமடித்த போது நான் களத்தில் இருந்தேன்”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் வேண்டாம்.. அந்த 2 கீப்பர்ஸ் இருக்காங்க.. இர்பான் பதான்

“பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய சிக்சர்கள் அடித்த நீண்ட முடியுடன் கூடிய தோனி இன்று வந்துள்ளார். அவருடைய பேட்டில் வரும் சத்தம் பிரமாதமாக இருக்கிறது. அது வரும் போட்டிகளில் எதிரணி பவுலர்களுக்கான எச்சரிக்கையாகும். ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் தோனியின் ஃபார்ம் தொடரும் என்று கருதுகிறேன்” என்று சிங்கம் எப்போதும் வாழ்கிறது என்ற தலைப்புடன் ட்விட்டரில் பேசினார்.

Advertisement