இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் ஜனவரி 5-ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற இருக்கிறது.
மீண்டும் இந்த தப்பை செய்யாதீங்க :
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் சிட்னி போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு முன்னாள் கேப்டனான அசாருதீன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்வதால் நம்மால் வெற்றி பெற முடியாமல் போகிறது.
நம்முடைய கேப்டன் ரோகித் சர்மா தற்போது பார்மில் இல்லை. எனவே அவருக்கு கடைசி போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ரோகித் சர்மா போட்டியின் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடாமல் சற்று நிதானித்து விளையாடினால் அவரது ஃபார்மை மீட்டெடுக்க முடியும். அதேபோன்று விராட் கோலி இந்த ஆஸ்திரேலியா தொடரில் ஒரே மாதிரி ஸ்விங் பந்துகளில் ஆட்டமிழந்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக ஸ்விங்கை எதிர்கொள்ள அவர் கிரீசுக்கு வெளியே வந்து நிற்கிறார். ஆனால் அது தவறான விடயமாகும். கிரீசுக்குள் நின்று விளையாடினால் பந்து எங்கு ஸ்விங் ஆகிறது என்று நன்றாக தெரியும். எனவே அதை வைத்து அவரால் சிறப்பாக விளையாட முடியும். ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு அணியாக வெற்றிபெற வேண்டுமெனில் ஒரு தனி நபருடைய ஆட்டம் மட்டும் அதை நிவர்த்தி செய்து விடாது.
இதையும் படிங்க : மொத்தம் 1427 ரன்ஸ்.. மாறிமாறி அடி.. ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே 2 அணிகளும் சாதனை.. ஜிம்பாப்வே வீரர் உலக சாதனை
பேட்டிங் வரிசையில் உள்ள அனைவருமே தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். சிட்னி போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறும் பட்சத்தில் அந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அணி தான் வெற்றி பெறும். இந்திய அணி முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடினால் மட்டும்தான் நம்மால் வெற்றி பெற முடியும் என அசாருதீன் கூறியது குறிப்பிடத்தக்கது.



