
ஐசிசி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி சதத்தை அடித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான அவர் சமீப காலங்களாக சுமாரான ஃபார்மில் இருந்து வந்தார். அதனால் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டி துவங்குவதற்கு 90 நிமிடங்கள் முன்பாகவே விராட் கோலி துபாய் மைதானத்திற்கு வந்தார். அங்கே ஸ்பெஷல் பயிற்சிகளை எடுத்த அவர் அதை களத்திலும் செயல்படுத்தி ஃபார்முக்கு திரும்பி தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார்.
இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான்கள் லயனல் மெஸ்ஸி, ரொனால்டோ போல விராட் கோலி வயதைக் கடந்தும் அசத்துவதற்கு தேவையான வேலை நெறிமுறைகளைக் (ஒர்க் எதிக்ஸ்) கொண்டுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரொனால்டோவை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மெஸியை ஏன் மக்கள் ரசிக்கிறார்கள்?”
“குறிப்பாக ரொனால்டோவை பற்றி பேசும் போது அவருடைய வாழ்க்கை முறையைப் பாருங்கள். வேலை நெறிமுறைகள், ஃபிட்னஸ் போன்றவைகளைக் கொண்ட அவர் கம்ப்ளீட் பேக்கேஜ். அதே போல விராட் கோலியும் கம்ப்ளீட் பேக்கேஜ். அவர் ஏன் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார்”
“மிகவும் முக்கியமில்லாத பாகிஸ்தானில் கூட அவர் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளைக் கடந்து இந்தத் தலைமுறைக்கு விராட் கோலி உத்வேகமாக இருக்கிறார். கிரிக்கெட்டில் அசத்த விரும்பும் இளைஞர்கள் விராட் கோலியின் கால் தடத்தைப் பின்பற்ற வேண்டும். அவரைப் போன்ற வீரருக்கு வயது முக்கியமல்ல”
இதையும் படிங்க: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா – விவரம் இதோ
“ஃபார்ம் அடிப்படையில் அவருடைய வேலை நெறிமுறைகள் மாறுவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக 90 நிமிடங்கள் முன்பாகவே அவர் மைதானத்திற்கு வந்து பயிற்சிகளை செய்தார். இன்னும் அவர் ஓரிரு வருடங்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடக் கூடும். ஆனால் அவருடைய வேலை நெறிமுறைகள் எப்போதும் உயர்வாகவே இருக்கும். எனவே அவருடைய திறன் மற்றும் வேலை நெறிமுறைகளை சந்தேகப்பட வேண்டாம்” என்று கூறினார்.