இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனால் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.
அந்தப் போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினார்கள். அதனால் ரவீந்திர ஜடேஜா டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து 61* ரன்கள் எடுத்துப் போராடியும் இந்தியா பரிதாபமாக தோற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு கேப்டன் சுப்மன் கில் முக்கிய காரணமானதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மிருகத்தை தட்டி எழுப்பிட்டிங்க:
குறிப்பாக 3வது நாளின் மாலையில் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அதனால் கோபமடைந்த கில் சில மோசமான வார்த்தைகளை சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்தார். அதே போல இந்தியா அணியினரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சூழ்ந்து கொண்டு பதிலடி கொடுத்தது பரபரப்பை உண்டாக்கியது.
அந்த தருணமே 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்தை நெருப்பாக மாற்றி இந்தியாவை தோற்கடிக்க வைத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சொல்லப்போனால் எங்களுடைய ஒரு வீரரை சீண்டினால் இந்தியாவுக்கு மொத்தமாக வந்து பதிலடி கொடுப்போம் என்று போட்டியின் முடிவில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்தார். இந்நிலையில் விராட் கோலியை ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்று நினைத்து சுப்மன் கில் அப்படி செய்ததாக மொய்ன் அலி தெரிவித்துள்ளார்.
மொய்ன் அலி கருத்து:
ஆனால் அது இங்கிலாந்து அணிக்குள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி மொயின் அலி பேசியது பின்வருமாறு. “அது பரவாயில்லை. விராட் கோலியைப் போல அவரும் போட்டியைக் கொடுத்து சண்டையிட முயற்சித்தார். ஆனால் அது இங்கிலாந்து அணியின் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்தது”
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ரசல்.. 2 டி20 உ.கோ வின்னர் முடிவால் 2026க்கு முன் வெ.இ அணிக்கு இடி
“இங்கிலாந்திடம் இருக்கும் சண்டை செய்யும் குணத்தையும் மிருகத்தையும் வெளியே கொண்டு வந்தீர்கள். அது தான் இங்கிலாந்து அணி காட்டிய வித்தியாசமான பக்கம் என்று நினைக்கிறேன். அதற்கு கில் ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார். மேலும் சேர்க்கை காரணமாக குல்தீப் யாதவை இந்திய அணிக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



