பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிசப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
அப்போது இந்திய அணி இந்தப் போட்டியிலும் தோற்கும் என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தார்கள். ஆனால் அடுத்ததாக பந்து வீசிய இந்தியாவுக்கு கேப்டன் பும்ரா ஆரம்பத்திலேயே கவாஜா 2, மெக்ஸ்வீனி 10, ஸ்டீவ் ஸ்மித் 0 ரன்களில் அவுட்டாக்கி கேப்டன் பட் கமின்ஸையும் 3 ரன்களில் காலி செய்தார். அவருடன் சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் அதிரடியாக பந்து வீசினார்கள்.
பும்ரா அசத்தல்:
அதனால் ஆஸ்திரேலியாவை 67-7 என முதல் நாள் முடிவில் கட்டுப்படுத்தியுள்ள இந்தியா 83 ரன்கள் முன்னிலையை வைத்துள்ளது. அதன் காரணமாக இந்தப் போட்டியில் இந்தியா போராடி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் மற்ற பவுலர்களை காட்டிலும் வெள்ளைக்கோட்டுக்கு கொஞ்சம் முன்னதாக பந்தை ரிலீஸ் செய்யும் விதமும் தனித்துவமான பவுலிங் ஆக்சனும் தான் பும்ரா இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட காரணம் என்று மிட்சேல் ஸ்டார்க் பாராட்டியுள்ளார்.
அதை தம்மைப் போன்ற பவுலர்கள் முயற்சித்தால் காயத்ததை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அவருடைய முழங்கை மற்றும் பல்வேறு ஆக்சன்கள் அவருக்கு நிறைய செயல்களை வழங்கலாம். அதைப் பயன்படுத்தி அவர் நீண்ட காலமாக அனைத்து ஃபார்மட்டிலும் சிறந்த பவுலராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை”
ஸ்டார்க் பாராட்டு:
“இன்று அவர் வெளிப்படுத்திய திறமைகள் பும்ரா எந்தளவுக்கு சிறப்பானவர் என்பதை மீண்டும் காட்டியுள்ளது. அவர் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளியில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதுவே அவருடைய செயலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அது பலரால் செய்ய முடியாத ஒன்று. அதை நிச்சயமாக நான் முயற்சிக்கப் போவதில்லை”
இதையும் படிங்க: என்னோட ரோல் மாடல் விராட் கோலியின் கையால் கனவு நிஜமாகும்ன்னு நினைக்கல.. நிதிஷ் பேட்டி
“ஏனெனில் அதை முயற்சித்தால் நான் ஒருவேளை உடையலாம்” என்று கூறினார். இதை அடுத்து ஆஸ்திரேலியாவை 150 ரன்களுக்குள் சுருட்ட இந்தியா போராட உள்ளது. அதை செய்த பின் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி கொஞ்சம் பெரிய ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.



