இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் அத்தொடருக்காக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இம்முறை புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சவாலான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
அவருடைய தலைமையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கடைசி முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார்கள். அடுத்ததாக இந்திய அணி இன்னும் சில வருடங்கள் கழித்து தான் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
சிறந்த விராட், ரோஹித்:
அப்போது அவர்கள் ஓய்வு பெற வாய்ப்புள்ளதால் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இம்முறை அவர்களுடைய ஆட்டத்தைக் காண்பதற்காக ஆஸ்திரேலியா ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதனாலேயே இத்தொடருக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்தது. இந்நிலையில் இந்தியாவின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்வதில் வல்லவர் என்று ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சேல் மார்ஷ் பாராட்டியுள்ளார்.
எனவே விராட் மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடைசி முறையாக மகிழ்ச்சியுடன் நேரில் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் தம்முடைய தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை விராட், ரோஹித் தங்களது கடைசி வாய்ப்பில் அதிகம் அடிக்கக்கூடாது என்றும் அவர் கலகலப்பாக தெரிவித்துள்ளார். இது பற்றி மார்ஷ் பேசியது பின்வருமாறு.
ஆஸி கேப்டன் பாராட்டு:
“நீண்ட பயணத்தில் அவர்களுக்கு எதிராக நிறைய விளையாடும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் பெருமையடைகிறேன். அவர்கள் இந்த விளையாட்டின் ஜாம்பவான்கள். குறிப்பாக விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் சேஸர். அவர்களைப் பார்க்க நிறைய மக்கள் இங்கே வருகிறார்கள். அதனாலேயே டிக்கெட் விற்பனை அதிகமாக இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்”
இதையும் படிங்க: சுப்மன் கில்லை பார்த்து எனக்கு பயம் வருவது உண்மையே.. ஆனா அதுக்காக பயப்படல.. சூரியகுமார் ஓப்பன்டாக்
“ஒருவேளை ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவது இதுவே கடைசியாக இருந்தால் அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். மக்களும் அதைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக அவர்களிடம் இருந்து ரசிகர்கள் சிறந்த கிரிக்கெட்டை பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். எப்படி இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் அந்த 2 சிறந்த வீரர்கள் விளையாடுவதைப் பாருங்கள்” என்று கலகலப்பாக கூறினார்.



