ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்குகிறது. அந்தத் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளை வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.
ஏனெனில் சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடும் அவர் கடந்த நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடைசி முறையாக விளையாடவிருக்கும் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 2014 தொடரில் விராட் கோலிக்கு அவர் எதிரியாக கருதப்பட்டார்.
ஜான்சன் விருப்பம்:
ஏனெனில் பவுன்சர் பந்தை வீசி விராட் கோலியின் மண்டையை பதம் பார்த்த ஜான்சன் மிகப்பெரிய சவால் விடுத்தார். அதற்கு அசராத விராட் கோலி திருப்பி அடித்து சதமடித்து காற்றில் முத்தத்தை பறக்க விட்டு பதிலடி கொடுத்தது ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த சூழ்நிலையில் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் ஜான்சன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“36 வயதாகும் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் கடைசி முறையாக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார். இது அவர் சிறப்பாக விளையாடிய இடமாகும். ஆஸ்திரேலியாவில் 54.08 என்ற அவருடைய பேட்டிங் சராசரி 47.83 என்ற கேரியர் சராசரியை விட அதிகம். சமீபத்தில் அவருடைய ஃபார்ம் நன்றாக இல்லை. அதனால் இந்திய ரசிகர்களுக்கு முன்னிலையில் மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டிய அழுத்தத்தில் அவர் உள்ளார்”
ரசிகனான எதிரி:
“இந்த சூழ்நிலை சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை அவருக்கு கொடுக்குமா அல்லது இதுவே அவரை சாய்க்குமா என்பதை பார்க்க நான் உள்ளேன். ஒரு ரசிகனாக பார்க்கும் போது ஆஸ்திரேலியாவில் அவர் இன்னும் ஒரு டெஸ்ட் சதம் அடிப்பதையே நான் விரும்புகிறேன். தசாப்தத்துக்கு முன்பாக அப்படி பார்த்திருக்க மாட்டேன்”
இதையும் படிங்க: 2021 மாதிரி இம்முறை அஸ்வின் என்னை அவுட்டாக்க முடியாது.. காரணம் இது தான்.. ஸ்மித் பேட்டி
“இந்த தொடரில் சிறந்த அணிக்கு எதிராக அவர் அவசரத்துடன் நெருப்புடன் விளையாடி சிறந்த போட்டியை உருவாக்குவதை பார்க்க விரும்புகிறேன். அது தான் விராட் கோலியும் தற்சமயத்தில் தன்னுடைய வீட்டில் நினைத்துக் கொண்டிருப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார். அந்த வகையில் எதிரணியினர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு விராட் கோலி தரத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



