இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.
இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஸ்மித் மற்றும் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடவில்லை. ஸ்மித் இரண்டு போட்டிகள் சேர்த்து மொத்தம் 10 ரன்கள் (1,1,0,8) மட்டுமே எடுத்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து லபுஸ்சேன் 47,6,48,28 ரன்கள் எடுத்தார். இவர்களது சொதப்பலான ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. இது குறித்து மைக்கேல் ஹசி கூறுகையில் “ கடந்த இரண்டு போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருந்தது. அதுமட்டுமின்றி இந்திய அணி ஸ்மித்தின் விக்கெட்டை முக்கியமாக கருதி சிறந்த திட்டத்துடன் களமிறங்கிய இருந்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை குறிவைத்தும், லெக்சைடில் அதிகமான வீரர்களை நிறுத்திவைத்து ஆஸ்திரேலிய வீரர்களை திணற வைத்து விட்டனர். பும்ரா ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஷாட் பால் வீசி எல்பிடபிள்யூ விக்கெட் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஸ்மித்தின் பார்ம் தற்போது கவலையாக இருக்கிறது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பயிற்சியுடன் சிறப்பாக விளையாடுவார்.
லபுஸ்சேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் ரன்கள் ஏதும் பெரிய அளவிற்கு குவிக்கவில்லை” என்று மைக்கேல் ஹசி பேசியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் பெரிதும் தடுமாறிவரும் ஸ்மித் இதுவரை இருமுறை அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.