தேவையில்லாமா எதுக்கு இந்த சீரிஸ்.. முழு பவர நாங்க காட்ட விரும்பல.. மைக் ஹசி விமர்சனம்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வென்று தொடரை வெல்வதற்கு கடுமையான போட்டி போட்டு வருகின்றன. முன்னதாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் இத்தொடரில் இந்தியா விளையாடுவது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

ஏனெனில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றும் இறுதிப்போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியை சந்தித்ததால் இந்திய வீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். அந்த சோகத்திலிருந்து வெளிவருவதற்குள் அடுத்த இரண்டு நாட்களில் இப்படி ஒரு தொடரை பிசிசிஐ நடத்துவது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

- Advertisement -

மைக் ஹசி அதிருப்தி:
மறுபுறம் 6வது முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியினர் அதை முழுமையாக கொண்டாடி முடிப்பதற்கு முன்பாக இத்தொடரில் களமிறங்கினர். மேலும் உலகக் கோப்பையில் விளையாடி முடித்த அழுத்தத்திலிருந்து முழுமையாக வெளிவந்து புத்துணர்ச்சியை பெறுவதற்கு முன்பாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் விளையாடுவதும் அந்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை நடைபெற்று முடிந்ததும் நடைபெறும் இத்தொடர் யாரிடமும் ஆர்வமின்றி மலிவான தொடராக இருப்பதாக மைக் ஹசி விமர்சித்துள்ளார். மேலும் இந்திய அணியை இத்தொடரில் வீழ்த்தும் அளவுக்கு ஆஸ்திரேலியா தங்களுடைய முழு பவரான அணியை களம் இறக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி இருநாட்டு வாரியங்களையும் சமீபத்திய பேட்டியில் விமர்சித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த டி20 தொடர் மதிப்பிழந்து விட்டதாக நான் நிச்சயமாக உணர்கிறேன். இது உலக கோப்பையின் மதிப்பை குறைக்காது. ஆனால் இத்தொடரை நிச்சயமாக மலிவு படுத்துகிறது. இரண்டு அணிகளிலுமே உலகக் கோப்பையில் விளையாடிய நிறைய முக்கிய வீரர்கள் விளையாடவில்லை. அவர்களில் பலர் ஒன்று வீட்டுக்குச் சென்றனர் அல்லது டெஸ்ட் தொடருக்காக விளையாட ஓய்வெடுக்கின்றனர். குறிப்பாக சிறந்த இந்திய டி20 அணியை தோற்கடிக்கும் அளவுக்கு தற்போதைய ஆஸ்திரேலிய அணி வலுவாக இல்லை”

இதையும் படிங்க: அடுத்த சிஎஸ்கே கேப்டன் சஞ்சு சாம்சன் தான்.. தனது பெயரில் வைரலான பதிவுக்கு அஸ்வின் பதிலடி

“இப்படி சர்வதேச அரங்கில் நெருக்கமான போட்டிகள் நடைபெறுவதை பார்ப்பது வியப்பாக இருக்கிறது. இது உடலளவிலும் மனதளவிலும் அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாட முடியாத அசாத்தியமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல என்ன தான் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இரண்டாவது தர அணியை களமிறக்கினாலும் உலகக் கோப்பை முடிந்ததும் நடைபெறும் இத்தொடரை பார்ப்பதற்கு பெரும்பாலான ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதே போல வீரர்களும் புத்துணர்ச்சியின்றி விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement