டி20 உ.கோ’யில் வெல்லப்போவது யார்? ஜாம்பவான் மைக்கேல் பெவன் தேர்வு செய்த 3 அணிகள் இதோ

Bevan
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக இருக்கும் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்களுக்கு முன்னோடியாக உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடருக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசும் மரியாதையும் உள்ளது. மேலும் சாதாரணமாகவே ஐபிஎல் போன்ற தொடர்களில் முழு திறமையை வெளிப்படுத்தி மோதிக்கொள்ளும் வீரர்கள் தங்களது நாட்டுக்காக கோப்பையை வெல்ல முழு மூச்சுடன் போராடுவார்கள் என்பதால் இத்தொடரில் தரத்திற்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது எனலாம்.

அந்த வகையில் மெல்போர்ன், சிட்னி போன்ற முன்னணி நகரங்களில் நடைபெறும் இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் 45 போட்டிகளில் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகள் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று துவங்கும் தகுதி சுற்றில் களமிறங்கி அதில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற போராட உள்ளன.

- Advertisement -

பெவனின் டாப் 3:
அதை தொடர்ந்து வரும் அக்டோபர் 22இல் துவங்கும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் போதும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகமே எதிர்பார்த்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இப்படி அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற கணிப்புகளும் விவாதங்களும் கடந்த ஒரு மாதமாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் இணைந்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் மைக்கேல் பெவன் தங்களது நாட்டில் நடைபெறும் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை பொருத்த வரை இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக தற்சமயத்தில் பார்மில் இருக்கும் அணிகள் என்று பார்த்தால் இந்தியா மற்றும் இங்கிலாந்தை நான் தேர்வு செய்வேன். அதே சமயம் நட்சத்திர வீரர்களையும் திறமையான வீரர்களையும் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகள் க்ளிக் ஆகும் பட்சத்தில் அவர்கள் அடுத்தடுத்த உலக கோப்பைகளை வெல்வதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. அது போக அவர்களுக்கு சொந்த மண் சாதகமும் இருப்பது சற்று உதவியை செய்யும். எனவே தற்போதைய நிலைமையில் இந்த 3 அணிகளும் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்ட் கடந்த சில மாதங்களாக அற்புத செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் தங்களது அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறினார். அதிலும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து துபாயில் பாகிஸ்தான், இந்தியா போன்ற வலுவான அணிகளை சாய்த்து கோப்பையை வென்று ஆசிய சாம்பியனாக இந்த உலக கோப்பையில் களமிறங்கும் தங்களது அணியும் நல்ல திறமை கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது.

“ஆசிய கோப்பையை வென்றுள்ள அவர்கள் கடந்த 2 – 3 மாதங்களாக அற்புதமான கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அவர்கள் விளையாடும் விதத்தை நிறைய பேர் விரும்புகின்றனர். எனவே எதிரணிகள் இலங்கையை எதிர்கொள்ளும் போது கவனத்துடன் விளையாட வேண்டும். அதை அவர்கள் சரியாக செய்யும் பட்சத்தில் ஆசிய கோப்பை போலவே சத்தமின்றி பெரிய அளவில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : என்னுடைய இந்த அதிரடியான சதத்திற்கு காரணமே அவர்கொடுத்த நமபிக்கை தான் – ரைலி ரூசே ஓபன்டாக்

இருப்பினும் தற்போது தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கை தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுடன் மோதி அதில் வெற்றி பெற்றால் மட்டுமே முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement