IND vs ENG : முன்னேறவே இல்ல, பும்ராவ உலகசாதனை படைக்க வெச்சுட்டீங்களே – இங்கிலாந்து மீது மைக்கேல் வாகன் அரிதான விமர்சனம்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 412 ரன்கள் சேர்த்தது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இப்போட்டியில் புஜாரா, கில், விராட் கோலி என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 98/5 என இந்தியா தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அற்புதமாக பேட்டிங் செய்து 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சூப்பர் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள்.

Rishabh-Pant-and-Ravindra-Jadeja

- Advertisement -

அதில் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் போல 146 (111) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ஜடேஜா சதமடித்த 104 ரன்களில் அவுட்டானார். இறுதியில் யாருமே எதிர்பாராத வகையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அசத்தும் இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் தனது முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு சுருண்டது. அலெஸ் லீஸ் 6, ஜாக் கிராவ்லி 9, ஓலி போப் 10 என அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கேப்டன் பும்ராவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 31 பென் ஸ்டோக்ஸ் 25 என முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் அதிகபட்சமாக 14 பவுண்டரி 2 சிக்சருடன் அற்புதமாக பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

Virat Kohli Jonny Bairstow

அதை தொடர்ந்து 132 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா தனது 2-வது இன்னிங்சில் வெற்றிக்காக பேட்டிங் செய்து வருகிறது. முன்னதாக இப்போட்டியில் சரிந்த இந்தியாவை மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ரிஷப் பண்ட் – ஜடேஜா அவுட்டானதும் கடைசி நேரத்தில் களமிறங்கிய இந்திய கேப்டன் பும்ராவை எளிதாக அவுட்டாக்க நினைத்த இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் அதற்காக ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்சர் பந்துகளை ஆயுதத்தை கையிலெடுத்து அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார்.

- Advertisement -

முன்னேறவில்லை:
ஆனால் அதற்காக அசராத பும்ரா லெக் சைட் ஷார்ட் பிட்ச் பந்துகளை பின்பகுதியில் சிக்ஸர்களாக பறக்கவிட்டு பவுன்சர் பந்துகளை கீழே விழுந்தாவது புல் ஷாட் அடித்து பவுண்டரிகளை பறக்கவிட்டு தக்க பதிலடி கொடுத்தார். 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என யுவராஜ் சிங்கை போல ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்க விட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்து அனைவரையும் திகைக்க வைத்தார். அதுவும் ஸ்டூவர்ட் பிராட் போன்ற 550 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த தரமான பவுலர் இப்படி மோசமாக பந்து வீசியது இங்கிலாந்து முன்னாள் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவமானமாக அமைந்தது.

Stuart Broad Yuvraj SIngh Jasprit bumrah

இந்நிலையில் கடந்த வருடம் இதே தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் பும்ராவுக்கு எதிராக இங்கிலாந்து பவுலர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை பிரயோகித்து தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிலிருந்து ஒரு வருடமாகியும் முன்னேறவில்லை என்று தங்களது நாட்டு பவுலர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாகவே இங்கிலாந்தை உயர்வாக பேசும் அவர் அரிதாக இது பற்றி பேசியது பின்வருமாறு.

“2-வது நாள் காலையில் இங்கிலாந்து மொத்தமாக தவறு செய்தது. நான் பிரண்டன் மெக்கலம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் ரசிகன். அவர்களது இது புதுமையான வித்தியாசமான எதிர்பாராத சிந்தனைகளை நான் விரும்புகிறேன். ஆனால் அது கால சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் பிட்ச் பிளாட்டாக இருந்தால் மட்டுமே வேலை செய்யும். எட்ஜ்பஸ்டனில் (பர்மிங்காம்) மேகங்கள் இருக்கும் போது நீங்கள் ஆப் ஸ்டம்ப்பின் மேல் பகுதியில் அதிகமாக பந்துவீசி அவுட்டாக்க முயற்சிக்க வேண்டும்”

Vaughan

“ஓரளவு பேட்டிங் செய்ய தெரிந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக பந்துவீச ஆண்டர்சன், ப்ராட் ஆகிய 2 மிகச்சிறந்த பவுலர்கள் உங்களிடம் உள்ளார்கள். ஆனால் அதை விட்டுவிட்டு ஃபீல்டர்களை நாலாபுறமும் வைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர்கள் வீசினார்கள். அது கடந்த வருடம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியை போன்றே அமைந்தது. அப்போட்டியில் சொதப்பிய பின்பும் இங்கிலாந்து பவுலர்கள் ஒரு வருடம் கழித்தும் எதையுமே கற்கவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement