இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் நிற பந்தில் விளையாடவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டுமென்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்புவதாக கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் காயமடைந்த ரோகித் சர்மா கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இந்நிலையில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-4 கணக்கில் தொடரை இழக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “ இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களான ஹேசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் பந்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தங்களது திறமையை காட்டி விடுவர்.
குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஒரு தோல்வியும் அடைந்ததில்லை. முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இந்திய இந்திய அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து 0-4 என டெஸ்ட் தொடரை இழக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் புகோவ்ஸ்கி காயம் காரணமாக விலகி விட்டார்கள் என்பது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.
இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஸ்சேன் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எதிர்த்து எந்த அணியும் அதிக அளவிலான ரன்கள் குவித்தது கிடையாது” என்று மைக்கில் வாகன் இந்திய அணியை எச்சரித்துள்ளார்.