இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்ததாக 3வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 387 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக இந்தியாவின் பேட்டிங் செய்து முன்னிலை பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 90 ஓவர்கள் வீசப்படுவது வழக்கமாகும்.
பணக்கார கேப்டன்கள்:
ஒருவேளை ஏதேனும் காரணத்திற்காக குறைவான ஓவர்கள் வீசப்பட்டால் அதை சரி செய்ய அடுத்த நாள் மாலையில் எக்ஸ்ட்ரா நேரம் வழங்கப்படும். அந்த நாளில் எஞ்சிய ஓவர்கள் மட்டுமின்றி அன்றைய நாளுக்கான 90 ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் இந்தப் போட்டியில் முதல் நாளில் இந்தியா 83 ஓவர்கள் மட்டுமே வீசியது. அதை விட மோசமாக 2வது நாளில் இரு அணிகளும் சேர்ந்து 75 ஓவர்கள் மட்டுமே வீசின.
அதனால் இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்காத விதிமுறையை இரு அணிகளுமே மீறியுள்ளன. அதனால் போட்டியின் முடிவில் இரு அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2வது நாளும் 90 ஓவர்களை வீசாத இரு அணி கேப்டன்களுக்கு அபராதத்தை தாண்டி தடை போன்ற கடினமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கடுமையாக சாடியுள்ளார்.
வாகன் விமர்சனம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அபராதம் வேலை செய்யும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் இந்தப் பையன்கள் கொஞ்சம் பணக்காரர்கள் என்பதால் அபராதம் அவர்களைப் பாதிக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாகவே பிரச்சனையாக இருந்து வருகிறது. வெப்பமான வானிலை, காயம் ஆகியவை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் 5வது நாளைக்கு செல்லும் போது நாம் 90 ஓவர்கள் வீச வேண்டும்”
இதையும் படிங்க: 10 ஓவர் கூட தாங்கலன்னா எப்படி? டுக் பந்துகள் பிரச்சனையை தீர்க்க இந்த 2 மாற்றத்தை செய்ங்க.. கும்ப்ளே பரிந்துரை
“1, 2, 3, 4வது நாட்களில் நம்முடைய போட்டி ஏன் நத்தை போல் விளையாடப்படுகிறது? என்பது எனக்குத் தெரியவில்லை. கண்டிப்பாக முதல் 2 நாளில் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். அதை செய்வதற்கு அதிகப்படியான தண்ணீர் இடைவேளை கொடுக்கக்கூடாது, தாமதமும் செய்யக்கூடாது. இதுவே எளிமையான வழி” எனக் கூறினார்.



