இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வரும் ஜூலை 1-ஆம் தேதி களமிறங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா முதல் 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா விராட் கோலி பெற்றுக்கொடுத்த முக்கால்வாசி வெற்றியை பினிஷிங் செய்து 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் வெற்றி கொடியை பறக்க விடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைப் போலவே இங்கிலாந்து தரப்பிலும் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளதால் முன்பைவிட தற்போது வலுவாக மாறியுள்ள அந்த அணி இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலைநிமிர போராட உள்ளது. எனவே கடும் சவாலாக அமையப் போகும் இந்த போட்டியில் வெல்வதற்காக இந்திய அணியினர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிரட்டல் ரூட்:
முன்னதாக இந்த தொடரில் கேப்டன்ஷிப் அழுத்தமின்றி சுதந்திர பறவையாக விளையாட போகும் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் இந்தியாவிற்கு கடும் சவாலை கொடுக்க உள்ளார். கடந்த பல வருடங்களாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் அவர் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கொண்டாடும் “பேஃப் 4” பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் கடந்த 2021 ஜனவரியில் வெறும் 17 சதங்களுடன் அவர்களுக்கு சமமாக இருந்த ஜோ ரூட் அதன்பின் கடந்த 12 மாதங்களில் ரன் மெஷினாக வெறித்தனமாக பேட்டிங் செய்து 10 சதங்களையும் 2000க்கும் மேற்பட்ட ரன்களையும் விளாசி முரட்டுத்தனமான பார்மில் எதிரணிகளை பந்தாடி வருகிறார்.
அதன் பயனாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோரையும் முந்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேனாக சமீபத்தில் சாதனை படைத்தார். அதைவிட 10000 ரன்களை இளம் வயதில் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையை முறியடித்த அவர் அலஸ்டேர் குக் உலக சாதனையை சமன் செய்தார். இதனால் சச்சினின் 15,921 ரன்கள் ஆல் டைம் உலக சாதனையை அவர் நிச்சயம் முறியடிப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள்.
காப்பி அடித்த கோலி:
மறுபுறம் 2019க்கு முன்பு வரை கிங்காக இருந்த விராட் கோலி அதன்பின் கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் சுமாரான பார்மில் தடுமாறி வருவது இந்திய ரசிகர்களுக்கு கவலையாக இருந்து வருகிறது. இந்த நிலைமையில் முரட்டுத்தனமான பார்மில் எதிரணிகளை வெளுத்து வரும் ஜோ ரூட் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்ப்புற பேட்ஸ்மேனாக நின்று கொண்டிருந்த போது தனது பேட்டை கையில் பிடிக்காமலேயே தரையில் செங்குத்தாக நிற்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் உலகம் முழுவதிலும் வைரலானது. அதைப் பார்த்த முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அது ஜோ ரூட் எந்த அளவுக்கு சமநிலையுடன் நல்ல பார்மில் இருப்பதை காட்டுவதாக பாராட்டினார்கள்.
I knew @root66 was talented but not as magic as this……. What is this sorcery? @SkyCricket #ENGvNZ 🏏 pic.twitter.com/yXdhlb1VcF
— Ben Joseph (@Ben_Howitt) June 5, 2022
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி எடுக்கும் வகையில் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக ஜூன் 23இல் துவங்கிய 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியின் முதல் நாளில் ஜோ ரூட் கையில் பிடிக்காமல் பேட்டை நிற்க வைத்தது போலவே தனது பேட்டை கையில் பிடிக்காமல் நிற்கவைக்க விராட் கோலி முயற்சித்தார். ஆனால் தற்போது எப்படி சுமாரான பார்மில் அவர் தடுமாறுகிறாரோ அதே போலவே அவரின் பேட்டும் செங்குத்தாக துணையின்றி நிற்க மறுத்ததால் உடனடியாக அவர் அதை கையில் பிடித்துக் கொண்டார்.
கலாய்க்கும் வாகன்:
இந்த வீடியோவும் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் “பேட்டை சமநிலைப்படுத்தும் போட்டியில் ஜோ ரூட் அளவுக்கு விராட் கோலி இல்லை” என்று விராட் கோலியை கலாய்த்துள்ளார்.
Virat not in the same Bat balancing league as Joe 😜😜 https://t.co/CJSvpPVB0W
— Michael Vaughan (@MichaelVaughan) June 23, 2022
Shock, Kohli tries to copy Root to no avail. pic.twitter.com/huUgwlmr4T
— England’s Barmy Army (@TheBarmyArmy) June 23, 2022
அதேபோல் “ஜோ ரூட்டை பார்த்து விராட் கோலி காப்பி அடிப்பது அதிர்ச்சியாக உள்ளது” என்று இங்கிலாந்து ரசிகர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கமான பார்மி ஆர்மி விராட் கோலியை கிண்டலடிடுத்துள்ளது.