ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் முடிவில் இந்தியா 2 – 1* என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏறத்தாழ இந்தியா இழந்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாராக பேட்டிங் செய்து வருகிறார்.
அதற்கிடையே நான்காவது போட்டியில் 19 வயது ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டஸை அவர் இடித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக விராட் கோலியை கோமாளி என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. அதே போல ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.
மோசமானவர் கிடையாது:
இந்நிலையில் இந்தியாவின் சிறந்த பவுலரான ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக கோன்ஸ்டஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு பின்னடைவை கொடுத்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். அதனாலேயே தன்னுடைய அணி மீது இருக்கும் பற்று காரணமாக அவர் மீது விராட் கோலி இடித்தார் என்று மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். அதற்காக விராட் கோலி மோசமானவர் கிடையாது என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால் அது தான் விராட் கோலியின் இயற்கையான குணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி மைக்கேல் கிளார்க் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அப்படிப்பட்ட கடினமான வீரர். அவர் தன்னுடைய கேரியரில் எப்போதும் பின் கால் வைத்ததில்லை. உலகின் சிறந்த பவுலரான பும்ராவுக்கு எதிராக ஷாம் மரியாதை கொடுக்க தவறியது அவரை விரக்தியடைய வைத்தது என்று நினைக்கிறேன்”
கிளார்க் ஆதரவு:
“இருப்பினும் போட்டி முடிந்ததும் அவரிடம் விராட் கோலி நேராக சென்று பேசினார். அந்த வகையில் விராட் கோலி சிறந்த வீரர். அவர் மோசமான மனிதர் கிடையாது. விராட் கோலி தன்னுடைய அணிக்காக நிற்கிறார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அதே போல நித்திஷ் ரெட்டி ஜீனியஸ் போன்ற வீரர் என்றும் மைக்கேல் கிளார்க் பாராட்டினார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய மண்ணிலும் என்னோட சிஷ்யன் அசத்த இதுதான் காரணம் – ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர் பகிர்வு
ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு பயப்படாமல் பேட்டிங் செய்த நிதிஷ் ரெட்டி 3 வகையான துறைகளிலும் அசத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணிக்கு அவர் நல்ல புதிய வீரராக வந்துள்ளதாகவும் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இதை அடுத்து கடைசி போட்டியில் வென்று இந்தியா தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



