அடிலெய்ட் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக முதல் போட்டியில் பும்ரா தலைமையில் விளையாடி வெற்றி கண்ட இந்திய அணிக்கு ரோஹித் சர்மா திரும்பியுள்ளார்.
மேலும் இரண்டாவது போட்டியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய உள்ளதாகவும் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ராகுல் 77 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அந்த ஜோடி முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியதால் இரண்டாவது போட்டியிலும் தொடர விரும்புவதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ரோஹித் முடிவு:
இந்நிலையில் 2வது போட்டியில் ரோகித் சர்மா ஐந்தாவது இடத்தில் விளையாடும் முடிவை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் 5வது இடத்தில் விளையாட உள்ளதை நேரடியாக தெரிவித்துள்ளார். அதனால் ராகுல் துவக்க வீரராக விளையாடுவார்”
“சுப்மன் கில் ஃபிட்டாகி பயிற்சி போட்டியில் ரன்கள் குவித்ததால் மூன்றாவது இடத்தில் விளையாடுவார். விராட் கோலி நான்காவது இடத்திலும் கேப்டன் ரோஹித் 5வது இடத்திலும் விளையாடக்கூடும். இங்கே தான் ரோகித் சர்மா தன்னுடைய அணிக்காக சிறந்த முடிவை எடுக்கும் வேலையை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ராகுல் முதல் போட்டியில் நன்றாக விளையாடினார்”
மிடில் ஆர்டரில்:
“அதனால் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்தால் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்வார். குறிப்பாக மிடில் ஆர்டரில் நேதன் லயனுக்கு எதிராக அவர் அதிகம் அதிரடியாக விளையாட பார்ப்பார். எனவே அந்த முடிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ஆரோன் பின்ச் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: அதுக்கு நான் பழைய ஆள் இல்ல.. என்னையே ஸ்லெட்ஜிங் செய்த இளம் ஜெய்ஸ்வால் பயமற்றவர்.. பாராட்டிய ஸ்டார்க்
“அடிலெய்ட் மைதானத்தில் இளஞ்சிவப்பு நிற பந்தில் ரோகித் மிடில் ஆர்டரில் விளையாடினால் கொஞ்சம் பழைய பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெறுவார். அதனால் அவர் அதிரடியாக விளையாட முயற்சிப்பார். அதை பார்க்க நன்றாக இருக்கும். ஐந்தாவது இடத்தில் ரோகித் விளையாடுவது இந்திய அணிக்கு நல்லது. அதே போல முதல் போட்டியில் அசத்திய கேஎல் ராகுல் தொடர்ந்து துவக்க வீரராக விளையாடினால் அது ஆஸ்திரேலியாவுக்கு பயத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்” என்று கூறினார்.