இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. ஜனவரி 11ஆம் தேதி வதோதராவில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 84, ஹென்றி நிகோலஸ் 62, டேவோன் கான்வே 56 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்து விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் போராடி 306/6 ரன்களை குவித்து வெற்றி பெற்று 2026 புத்தாண்டை வெற்றிகரமாக துவக்கியுள்ளது.
நம்பர் ஒன் இந்தியா:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக விராட் கோலி 93, கேப்டன் கில் 56, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களை குவித்து வெற்றியில் பங்காற்றினர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கெய்ல் ஜெமிசன் 4 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வெற்றிக்காக 49 ஓவர்கள் வரை போராட வைத்ததற்காக பெருமைப்படுகிறோம் என்று நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.
அந்தளவுக்கு தங்களுடைய அணி வெற்றிக்கு போராடியும் பேட்டிங்கில் 20 – 30 ரன்கள் குறைவாக எடுத்தது தோல்விக்கு வித்திட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய முயற்சிக்காக நாங்கள் பெருமையடைகிறோம். தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியாவை 49வது ஓவர் வரை நாங்கள் அழுத்தத்தில் தள்ளினோம் என்பது மகிழ்ச்சியானது”
பிரேஸ்வெல் பெருமிதம்:
“அதே சமயம் நாங்கள் முன்னேறுவதற்கு சில இடங்கள் இருக்கிறது. குறிப்பாக நாங்கள் எக்ஸ்ட்ராவாக 20 – 30 ரன்கள் எடுத்திருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும். ஜெமிசன் 15 ஓவர்கள் வீசியிருப்பதை நான் விரும்புகிறேன். காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவர் இன்று பந்து வீசிய விதம் எங்களுக்கு மிகப்பெரிய நேர்மறை அம்சமாக அமைந்தது”
இதையும் படிங்க: எங்களை விட வெற்றிக்கு ராணா தான் காரணம்.. இந்திய அணியில் எனக்கு இது கிடைச்சாலே போதும்.. ராகுல் பேட்டி
“எங்களுடைய பேட்டிங் குழு நல்ல அனுபவம் மற்றும் அமைதியைக் காண்பித்தது. மிட்சேல் நீண்ட காலமாக அசத்தி வருகிறார். ஒருவேளை நாங்கள் கடைசி ஓவர்களில் இன்னும் கொஞ்சம் ரன்கள் அடித்திருந்தால் இப்போட்டி இன்னும் சுவாரசியமானதாக அமைந்திருக்கும். நாங்கள் போட்டியை மாற்றும் தருணங்கள் பற்றி பேசுகிறோம். இன்று ஓரிரு தருணங்களில் அதை நன்றாக செய்த நாங்கள் இன்னும் ஓரிரு தருணங்களை திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவில் இரவில் பந்து வீசுவது எளிது கிடையாது. ஆனால் அந்த உயர்தரத்திற்கு நாங்கள் எங்களை தள்ளுகிறோம்” என்று கூறினார்.



