வெள்ளை பந்து கிரிக்கெட் எனப்படும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றி என்பது எந்த நேரத்திலும் மாறக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் கடைசி நேரத்தில் கடைசி பந்தில் கூட வெற்றி கைமாறிப்போகும் அளவுக்கு மிகவும் விறுவிறுப்பான தருணங்களை தன்னகத்தே கொண்ட வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கடைசி கட்ட பரபரப்பான நேரங்களில் களமிறங்கி அந்த சமயத்தில் நிலவும் அதிகப்படியான அழுத்தத்தை தாங்கி வெற்றி பெற்றுக் கொடுப்பது தனி கலையாகும்.
ஏனெனில் பவர்பிளே ஓவர்களின் உதவியுடன் ஆரம்பத்திலேயே பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டு ரன்களை சேர்க்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் போராட்டத்தை கடைசி நேரத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்னாக இருந்தாலும் அதை வெற்றிகரமாக எடுத்து வெற்றியாக மாற்ற தவறினால் அந்த மொத்த போராட்டமும் வீணாகி தோல்வி பரிசாக கிடைத்துவிடும்.
அத்துடன் கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசுவதற்காகவே ஸ்பெஷலான பவுலர்களை ஆரம்பம் முதலே எதிரணி கேப்டன் பாதுகாப்பாக வைத்திருந்து கடைசியில் ப்ரோயோகிப்பார். அந்த அனைத்தையும் தாண்டி கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை தேடிக்கொடுக்கும் பேட்ஸ்மேன்களை தான் ரசிகர்களும் வல்லுநர்களும் பினிஷெர்கள் என்று அழைக்கிறார்கள். உலகிலேயே அதுபோன்ற திறமை இதுநாள் வரை ஒருசில பேட்ஸ்மேன்களிடம் மட்டுமே காணப்படுகிறது.
மைக்கேல் பெவன்:
சொல்லப்போனால் நூற்றாண்டு சிறப்புமிக்க கிரிக்கெட் விளையாட்டில் இந்த கலையை முதல் முறையாக செய்து காட்டியது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கேல் பெவன் என்றால் மிகையாகாது. 90களின் இறுதியில் உலகையே மிரட்டும் அசுர பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் வெற்றி கைமீறிப் போன பல போட்டிகளில் அற்புதமாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர். அவருக்கு பின் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் எம்எஸ் தோனி பினிஷிங் எனும் கலையை தனது அபார திறமையால் உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்தியவர் என்றே கூறலாம்.
ஆர்மப காலத்தில் 3-வது இடத்தில் களமிறங்கிய அவர் கேப்டனாக பொறுப்பேற்றதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அணியின் நன்மைக்காக தனது வாழ்நாளின் பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடினார். அந்த வகையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தை பலமுறை கடைசி நேரத்தில் களமிறங்கி வெற்றிகரமாக வெற்றியாக பதிவு செய்த அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்து ஆரம்பத்திலேயே நான்கைந்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய எத்தனையோ தோற்கவேண்டிய போட்டிகளில் தனது அபார திறமையால் கடைசிவரை பேட்டிங் செய்து வெற்றிகரமாக பினிஷிங் செய்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
சிறந்த பினிஷெர்:
பொதுவாக பினிஷிங் என்பது கடைசி நேரத்தில் களமிறங்கிய அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமல்ல. ஆரம்பத்திலேயே 4 – 5 விக்கெட்டுகள் விழுந்தாலும் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நங்கூரமாக நின்று போட்டியை கடைசி ஓவரின் கடைசி பந்து வரை எடுத்துச் சென்று வெற்றியுடன் முடிப்பதே பினிஷிங் என்ற வார்த்தையின் உண்மையான பொருளாகும். அந்த வகையில் அந்த இரண்டையுமே பல தருணங்களில் செய்து காட்டியுள்ள தோனியை பல ஜாம்பவான்களும் முன்னாள் வீரர்களும் வரலாற்றின் மிகச்சிறந்த பினிஷர் என்று போற்றுகிறார்கள். அவரைப் பார்த்து இன்று நிறைய இளம் வீரர்கள் அவரைப்போலவே பினிஷர்களாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுகிறார்கள்.
மேலும் அவருக்கு ஈடாக கைரன் பொல்லார்ட், ஹர்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் சில தருணங்களில் அவரை விட மிகச் சிறப்பாக பினிஷிங் செய்து காட்டி தங்களை மிகசிறந்த பினிஷர் என்று நிரூபித்துள்ளார்கள். இந்நிலையில் இந்தியாவின் எம்எஸ் தோனி வரலாற்றின் மிகச்சிறந்த பினிஷர் என்று பாராட்டியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் வீரர் மைக்கேல் பெவன் அதை செய்வதற்கு இளம் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 10 வருடங்களாக (2006 – 2015) ஐசிசி ஒருநாள் தரவரிசையில் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள தோனியை மனதார பாராட்டியுள்ள அவர் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மஹி ஒரு அற்புதமான பினிஷர். இதுபோல் நீங்கள் வருவதற்கு பண்புகளை கலவையாக கொண்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : வர்ணனையாளராக இருந்து கொண்டே பயிற்சி செய்தார் – தினேஷ் கார்த்திக்கின் அர்ப்பணிப்பை நினைவு கூறும் ஜாம்பவான்
ஒன்று மற்றொன்றை விட முக்கியமானதாக இருக்கவேண்டும். இதற்கான தந்திரங்கள்: அனைத்து தருணங்களுக்கும் ஏற்றார் போல் உங்களிடம் உள்ள ஷாட்களில் சிறந்தவற்றை தேர்வு செய்வதாகும். அது உங்களது அணிக்காக போட்டியை வெல்ல உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.



