இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் அதையும் சேர்த்து இந்தத் தொடரில் விளையாடிய 5 போட்டிகளிலும் இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்துள்ளது. சொல்லப்போனால் கடைசியாக விளையாடிய 15 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி டாஸ் வீசுவதில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது.
15க்கு 15 தோல்வி:
அதன் வாயிலாக ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிகப் போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியைச் சந்தித்த அணி பரிதாபமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. பொதுவாக டாஸ் என்பது திறமையைத் தாண்டி அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் கிடைக்கக்கூடியதாகும். ஆனால் அந்த டாஸ் அதிர்ஷ்டம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தியாவை திரும்பி பார்க்காமல் அடம் பிடிக்கிறது.
குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடியது. அந்த தொடரில் விளையாடிய 5 போட்டிகளிலும் இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தப் போதிலும் கோப்பையை வென்றது. ஆனால் தற்போது புதிய கேப்டன் கில் வந்தும் இந்தியாவின் பக்கம் டாஸ் திரும்பாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
சாஸ்திரியை தூக்குங்க:
இந்நிலையில் இந்தத் தொடர் பரிதாபத்தை நிறுத்த ரவி சாஸ்திரியை டாஸ் வீசும் நிகழ்வுக்கு அனுப்புவதிலிருந்து நீக்க வேண்டுமென முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கலாய்த்துள்ளார். அதாவது இந்தியா பங்கேற்கும் பெரும்பாலான போட்டிகளில் சாஸ்திரி தான் டாஸ் வீசும் நிகழ்வை தொகுத்து வழங்குவார். எனவே நீங்கள் டாஸ் வீசும் இடத்துக்கு செல்லாமல் இருந்தால் இந்தியா டாஸ் வெல்லும் என்று ஆதர்டன் கிண்டலாக சாஸ்திரியிடம் சொன்னார்.
இதையும் படிங்க: இதுக்காகவே குல்தீப்பை எடுத்துருக்கனும்.. இந்திய அணியின் வெற்றி மீது அக்கறை இல்லையா? கம்பீரை சாடிய கங்குலி
இது பற்றி டாஸ் நிகழ்வை முடித்து விட்டு வர்ணனையாளர் அறைக்கு வந்த சாஸ்திரியிடம் அவர் சொன்னது பின்வருமாறு. “நீங்கள் தான் டாஸ் வீசும் நிகழ்வுகளை தொகுக்கிறீர்கள். எனவே நீங்களும் அதற்குப் பொறுப்பு. இப்படியே போனால் நீங்கள் அதிலிருந்து நீக்கப்படுவீர்கள்” என்று கூறினார். அதற்கு ரவி சாஸ்திரி. “நாணயம் தரையில் விழுந்ததும், எப்படியும் நாம் தோற்றிருப்போம் என்று கில் அதைப் பார்க்கவே இல்லை” என்று அவருக்கு பதிலளித்தார்.



