இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. இந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் முன்னிலை வகிக்கும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மூன்றாவதாக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனதால் இந்திய அணியில் சில சீனியர் பேட்ஸ்மென்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து கருத்துகள் பலமாக எழுந்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியிலிருந்து துணை கேப்டன் ரஹானே நான்காவது போட்டியில் நீக்கப்பட வேண்டும் என தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : ரகானே இந்த தொடர் முழுவதும் ஒரு சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரது பேட்டிங் தொடர்ச்சியாக சரியாக இல்லை. எனவே என்னைப் பொறுத்தவரை இந்திய அணியில் மாற்றம் என்பது அவசியம் வேண்டிய ஒன்று. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் சொதப்பிய போது இங்கிலாந்து அணி அதில் மாற்றம் செய்தது.

அதேபோன்று இந்திய அணியும் ரஹானேவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை எடுத்தால்தான் இந்திய அணி நல்ல நிலைமைக்குத் திரும்பும். துணை கேப்டன் என்பதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அவரது ஆட்டம் தற்போது சற்று மந்தமாகவே உள்ளது என வாகன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது போலவே ரகானே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் 61 ரன்களை குவித்ததை தவிர மற்ற நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 34 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 18 ரன்களும், இரண்டாவது இன்னிங்சிலும் 10 ரன்கள் மட்டுமே அவர் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



