
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்துள்ளதால் அவர்களின் ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதோடு சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எவ்வாறு மடக்கப்போகிறது என்பது குறித்த ஆவலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர்கள் யார்? எந்த அணி வெற்றி பெறும்? என்பது போன்ற பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக்கல் கிளார்க்கும் இந்த தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர்களாக ரோஹித் சர்மா அல்லது விராட் கோலி ஆகிய இருவரில் ஒருவரை கூறுவேன்.
ஏனெனில் அவர்கள் இருவருக்குமே இதுதான் கடைசி ஆஸ்திரேலியா தொடர் எனவே இந்த தொடரை அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடி நல்ல ஒரு நினைவுடன் முடிப்பார்கள் என்று கருதுகிறேன். ஆஸ்திரேலிய மைதானங்களில் என்னை பொறுத்தவரை மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடினால் அதிக ரன் குவிக்க ஏதுவாக இருக்கும்.
இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளை எந்த சேனலில் பாக்கலாம்? – எத்தனை மணிக்கு போட்டி நடைபெறும்?
துவக்க வீரராக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தாக்குப் பிடிப்பது கடினம். அந்த வகையில் ரோகித் சர்மா துவக்க வீரராக விளையாடுவதால் அவரை விட விராட் கோலி அதிக ரன்களை மூன்றாவது இடத்தில் களமிறங்கி குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடிக்கும் வீரராக இருப்பார் என கருதுவதாக மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.