
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் விளையாடி வருகிறது. அங்கே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது. முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால் துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது என்றாலும் அதைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்த நியூசிலாந்து வரலாறு படைத்தது. அதே போல இந்தப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிரேஸ்வெல் பேசியது பின்வருமாறு. “அது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு வித்தியாசமான மைதானத்திற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கண்டறிவது சுவாரசியமாகும்”
“எனவே இந்த ஆவலான சூழ்நிலைகளில் கற்றுக்கொண்டு நன்றாக முயற்சித்து விளையாடுவதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. முடிந்தளவுக்கு இங்குள்ள பிட்ச்க்கு எங்களை வேகமாக உட்படுத்திக்கொள்ள நாங்கள் முயற்சிக்க வேண்டும். அது போக பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் எங்களிடம் இருக்கிறது. பாகிஸ்தானில் இருந்த ஆடுகளங்களில் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம்”
“எந்த வகையான ஆடுகளத்திலும் அசத்துவதற்கு தேவையான சமநிலை பொருந்திய அணி எங்களிடம் இருக்கிறது. எனவே துபாயில் எங்கள் முன்னே இருக்கும் சூழ்நிலைகளில் நாங்கள் தொடர்ந்து அசத்துவோம் என்று நம்புகிறோம். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்ற தன்னம்பிக்கையுடன் இங்கே வந்துள்ளோம்”
இதையும் படிங்க: நீங்க விமர்சிப்பதே இந்தியாவின் பணம்.. ஜெய்க்கும் இந்தியாவை குறை சொல்லாம உங்களை பாருங்க.. கவாஸ்கர் விளாசல்
“மேலும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம். நாங்கள் ஒவ்வொரு போட்டியாக எடுத்துக்கொண்டு வெற்றி வேகத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கிறோம். ஐசிசி தொடரில் இந்தியாவை எதிர்கொள்வது கண்டிப்பாக மிகவும் பெரியப் போட்டி. இதில் வெற்றி பெற்றால் செமி ஃபைனலுக்கு முன்பாக நாங்கள் நிறைய வேகத்தை எடுத்துச் செல்ல முடியும்” என்று கூறினார்.