வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் முயற்சியில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வெற்றி நடைபோட்டு உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அதற்காக துவளாமல் அடுத்ததாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பாதைக்கு திரும்பிய இந்தியா தற்போது தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு வருகிறது. உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி டி20 தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றியுடன் ஆஸ்திரேலியா புறப்பட இந்தியா விளையாடி வருகிறது.

குறிப்பாக ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றில் தோற்று பைனலுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறி பெரிய அவமானத்தை சந்தித்தது. எனவே அந்த தோல்வியில் கற்ற பாடங்களை திருத்திக் கொண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா தயாராகி வருகிறது. முன்னதாக கடந்த 1992 முதல் நடைபெற்ற அத்தனை ஐசிசி உலகக்கோப்பை தொடர்களிலும் தோற்காமல் வீரநடை போட்ட இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து தலை குனிந்தது.
மெல்போர்ன் வீடு:
இருப்பினும் தங்களை தோற்கடிக்க பரம எதிரிக்கு 30 வருடங்கள் தேவைப்பட்டதை நினைத்து இந்தியா பெருமை கொண்டாலும் அந்த ஒரே ஒரு வெற்றியை வைத்து இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் தலை கால் புரியாமல் ஆடி வருகிறது. எடுத்துக்காட்டாக கடந்த முறை தோற்க காரணமாக இருந்த ஷாஹீன் அப்ரிடி காயத்தால் ஆசிய கோப்பையில் விலகியபோது இந்தியா தப்பித்து விட்டதாக வக்கார் யூனிஸ் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வெளிப்படையாக இந்தியாவை வம்பிழுத்தனர்.

அதற்கு லீக் சுற்றில் பதிலடி கொடுத்த இந்தியா சூப்பர் 4 சுற்றில் தோற்றதால் எஞ்சியிருக்கும் அந்த பழைய கணக்கை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் கொடுக்க காத்திருக்கிறது. ஆனால் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகப்புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் அப்போட்டியில் இந்தியாவை மீண்டும் தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் இப்போதே சூளுரைத்து வருகிறது. அந்த வரிசையில் இணைந்துள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரீஸ் ரவூப் அப்போட்டி நடைபெறும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் தன்னுடைய சொந்த வீடு என்பதால் இம்முறையும் இந்தியாவை தோற்கடிப்பது உறுதி என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக அம்மைதானத்தில் விளையாடி வரும் அவர் அங்குள்ள சூழ்நிலைகள், பிட்ச்சின் தன்மை போன்றவற்றை அறிந்திருப்பதால் அதை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீச முடியும் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் கொண்டது. எதிரணி யாராக இருந்தாலும் அழுத்தம் இருக்கும்”

“கடந்த உலகக்கோப்பையில் நான் உணர்ந்த அதிகப்படியான அழுத்தத்தை இந்த ஆசிய கோப்பையின் 2 போட்டிகளில் உணரவில்லை. ஏனெனில் நான் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போனதும் என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை நான் வெளிப்படுத்தினால் அவர்கள் (இந்தியா) என்னை எளிதாக எதிர்கொள்ள முடியாது. மேலும் விரைவில் நடைபெறும் உலகக் கோப்பை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுவதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஏனெனில் அது என்னுடைய சொந்த மைதானமகும்”
“அதிலும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடுவதால் அங்கு எந்த மாதிரியான கால சூழ்நிலைகள் நிலவும் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்தியாவுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்ற திட்டத்தை இப்போதே நான் தொடங்கி விட்டேன்” என்று கூறினார். பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வரும் இவர் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை எடுத்து நல்ல பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



