வங்கதேசத்துக்கு பயணித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி விளையாடும் இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 1ஆம் தேதியன்று டாக்காவில் நடைபெற்றது. ஆனால் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த அந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பம் முதலே தரமாக செயல்பட்ட வங்கதேச பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது.
கேப்டன் ரோகித் சர்மா 27, விராட் கோலி 9, சிகர் தவான் 7 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் பொறுப்புடன் செயல்பட்ட துணை கேப்டன் கேஎல் ராகுல் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 73 (70) ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் ஆரம்பம் முதலே தரமாக செயல்பட்ட இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
சாதனை ஜோடி:
குறிப்பாக சாண்டோ 0, லிட்டன் தாஸ் 41, ஷகிப் அல் ஹசன் 29, ரஹீம் 18 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 39.3 ஓவரில் 136/9 என தடுமாறிய வங்கதேசம் தோல்வியின் பிடியில் சிக்கியது. அதனால் இந்தியாவின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த போது 8வது இடத்தில் களமிறங்கியிருந்த மெஹந்தி ஹசன் விஸ்வரூபம் எடுத்து நங்கூரமாக நின்று வெற்றிக்கு போராடினார்.
குறிப்பாக வங்கதேசம் 155/9 என்ற நிலைமையில் வெறும் 15* ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் விட்டதை பயன்படுத்திய அவர் அசத்தலாக செயல்பட்டு 4 பவுண்டரி 2 சிக்சருடன் 38* (39) ரன்கள் எடுத்தார். கூடவே முஸ்தஃபிசுர் ரஹ்மான் 10* (11) ரன்கள் எடுத்ததால் 46 ஓவரிலேயே 187/9 ரன்கள் எடுத்த வங்கதேசம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
9 விக்கெட்களை சாய்த்ததால் ஏற்பட்ட வெற்றி மமதையில் கடைசி நேரத்தில் அசால்டாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டி தக்க தண்டனை கொடுக்கும் வகையில் அமைந்து அவர்களுடைய பேட்டிங்கை இந்திய ரசிகர்களே பாராட்டுகிறார்கள். குறிப்பாக கடைசி விக்கெட்டுக்கு இந்தியா செய்த தவறுகளை பயன்படுத்திய மெஹந்தி ஹசன் – முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஜோடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தட்டிப் பறித்தனர். அப்படி டெயில் எண்டர்களிடம் படுதோல்வியை சந்தித்கும் அளவுக்கு டெத் ஓவர்களில் படு மோசமாக பந்து வீசிய இந்திய பவுலர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மொத்தத்தில் இப்போட்டியில் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மெஹதி ஹசன் – முஸ்தபிசுர் ரகுமான் ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 2வது வங்கதேச ஜோடியாக சாதனை படைத்தது. அதை விட அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்தியாவுக்கு எதிராக 10வது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையும் அவர்கள் படைத்துள்ளனர்.
இதற்கு முன் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியில் ஜிம்பாப்வே அணிக்காக டக்ளஸ் மார்லியர் – கேரி பிரண்ட் ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் 24* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்ததே இதற்கு முந்தைய சாதனையாகும். அந்த வகையில் 20 வருடங்கள் கழித்து பறிபோன வெற்றியை மனம் தளராமல் நம்பிக்கையுடன் போராடி வங்கதேசத்துக்கு பரிசளித்த அந்த ஜோடியை நிறைய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்கள்.