
ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த முக்கிய போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் விக்கெட் கீப்பராக தமிழகத்தின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் முன்னாள் வீரர்களுக்கு மத்தியில் அவருக்கு நிறைய எதிர்ப்புகள் காணப்படுகிறது. ஏனெனில் சூரியகுமார், பாண்டியா ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் வெறும் 10 – 12 பந்துகளை எதிர்கொள்வதற்காக அவருக்கு வாய்ப்பளித்து ஒரு இடத்தை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் நிலவும் இடதுகை பேட்ஸ்மேன் பஞ்சத்திற்கு போக்கும் வகையில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டுமென கருத்துகள் நிலவுகிறது.
ஆனால் அறிமுகமான 2017 முதல் இதுவரை பெற்ற 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட மனதில் நிற்கும் அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு ஆதரவாக ரசிகர்களும் கேப்டன் ரோகித் சர்மாவும் உள்ளனர். ஏனெனில் அவரில்லாமல் அதே 10 – 12 பந்துகளை எதிர்கொண்டு 15 – 20 ரன்களை எடுக்காத காரணத்தாலேயே சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது.
ஆனந்த கண்ணீர்:
அத்துடன் கடைசி கட்ட ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்வேன் என்று தினேஷ் கார்த்திக் எப்போதும் அடம் பிடித்ததுமில்லை. முன்னதாக மகத்தான தோனி இருந்ததால் ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாத அவர் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடி 2021இல் வர்ணனையாளராக அவதரித்ததால் அவருடைய இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் தம்மால் இந்த உலக கோப்பையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் 2022 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அற்புதமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்குப் பின் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற ஒரே இந்திய வீரராக சாதனை படைத்து தன்னை சிறந்த பினிஷெராக நிரூபித்து வருகிறார்.
அப்படி கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்த தினேஷ் கார்த்திக் இன்று இந்தியாவின் சிறந்த பினிஷராக திகழ்வது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த வயதில் போட்டி மிகுந்த இந்திய அணியில் கடினமாக உழைத்து முக்கிய இடத்தை பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று சமீபத்திய பேட்டியில் பாராட்டியிருந்தார்.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கழற்றி விட்ட பின்பும் வர்ணனையாளராக மாறியும் 30 வயதை கடந்து விட்டால் பெரும்பாலும் வாய்ப்பு மறுக்கப்படும் இந்திய அணியில் இன்று தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த பினிஷராக விளையாடுவது ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உரியது என்று சமீபத்தில் ரிக்கி பாண்டிங் மனதார பாராட்டினார். இந்நிலையில் தாம் பார்த்து வளர்ந்த மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் தம்மை பாராட்டியுள்ளதை பார்த்து நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக் அவருக்கு கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “ரிக்கி பாண்டிங். நான் வளரும் போது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்று எளிமையாக சொல்வேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் நான் ஒவ்வொரு நிமிடங்களையும் மகிழ்ச்சியுடன் செலவிட்டேன். அவர் சாம்பியன் தலைவர், போட்டியை உன்னிப்பாக படிப்பவர், களத்தில் கடுமையான போட்டியை அளிக்கக்கூடியவர் என்பது அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும்”
“இந்த வார்த்தைகளுக்காக மிகவும் நன்றிகள் ரிக்கி பாண்டிங். இந்த பாராட்டுக்கள் எனக்கு பொன்னானது. வருங்காலத்தில் மேலும் சில நேரங்களை உங்களுடன் செலவிடுவேன் என்று நம்புகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் என்னால் இதை சாதிக்க முடியும் என்று நம்பியதற்கு அபிஷேக் நாயர் முக்கிய காரணமாவார். மேலும் என் மீது நம்பிக்கை வைத்து இருட்டான பள்ளத்தில் இருந்த போது வெளிச்சத்தை போல் ஆதரவு கொடுத்த ரோகித் சர்மாவும் முக்கியமானவர். அத்துடன் என்னுடைய பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், கனவுகள் நிஜமாகும்” என்று கூறியுள்ளார்.