வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா நகரில் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரடிப்படி இரவு 8 மணிக்கு ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் 2வது செமி ஃபைனல் நடைபெறுகிறது. அப்போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. அப்போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஏனெனில் உலகின் மிகச் சிறந்த அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர், பிலிப் சால்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, லிவிங்ஸ்டன் போன்ற தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர். இருப்பினும் 2022 டி20 உலகக் கோப்பை போல இம்முறையும் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடிப்போம் என்று நாசர் ஹுசைன் போன்ற அந்நாட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னேறிய இந்தியா:
இந்நிலையில் 2022 செமி ஃபைனல் போல இம்முறையும் எளிதாக வெல்வோம் என்று கனவு காணவில்லை என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கூறியுள்ளார். ஏனெனில் தற்போது இந்திய அணி முன்னேறியுள்ளதாக தெரிவிக்கும் அவர் விராட் கோலிக்கு எதிராக திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளார். எனவே இம்முறை போராடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“நீண்ட காலமாக விராட் கோலி கிளாஸ் நிறைந்தவர் என்பதை நிரூபித்தவர். அவர் நாங்கள் நன்றாக திட்டங்களை தயாராகி திட்டங்களை வகுக்கக்கூடிய ஒரு வீரர். அவர் எப்படி விளையாடுவார் என்பதையும் எந்தளவுக்கு அதிரடியாகவும் சாதுரியமாகவும் செயல்படுவார் என்பதையும் நாங்கள் அறிவோம். இந்தத் தொடரில் இதுவரை என்ன நடந்தது என்பது முக்கியமில்லை. நாளைய போட்டியில் நாங்கள் மோதும் போது பெரிய வீரர்கள் பெரிய தருணத்தில் காலடி வைப்பார்கள்”
“எங்கள் வீரர்களைப் போலவே அவரும் அதை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த செமி ஃபைனலை விட தற்போது இந்தியா வித்தியாசமான அணியாக இருப்பதாக நாங்கள் விவாதித்துள்ளோம். கடந்த சில வருடங்களாக பவர் பிளே ஓவர்களில் அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள். ரோகித் சர்மா பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அணியை முன்னோக்கி நடத்துகிறார்”
இதையும் படிங்க: எதை தூக்கி போட்டாலும் அவர் அசரமாட்டாரு.. லேட்டா வந்துருக்கும் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தும்.. நாசர் ஹுசைன்
“அதே போல எங்களுக்கு ஜோஸ் பட்லர். தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் நாக் அவுட் சுற்றுக்கு வருவதிலிருந்தே இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் எங்கள் முன்னே நல்ல கிரிக்கெட் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இங்கே நாங்கள் சில நல்ல விஷயங்களை செய்தோம். எனவே அது போன்ற சிறிய அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் என்று நம்புகிறோம். இது மகத்தான போட்டியாக இருக்கும்” என்று கூறினார்.



