IPL 2023 : சிஎஸ்கே அணியில் ப்ராவோவுக்கு மாற்று வீரரா அவர் கிடைச்சுட்டாரு – இளம் வீரரை பாராட்டிய இர்பான் பதான்

Pathan
- Advertisement -

மிகுந்த போட்டியுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 12 போட்டிகளில் 7 வெற்றிகள் பதிவு செய்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் அந்த அணி கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து 2020க்குப்பின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த தோல்விக்கு சுமாராக செயல்பட்ட பந்து வீச்சு துறையில் தீபக் சஹர் ஆரம்பத்திலேயே காயமடைந்த நிலையில் ஜாம்பவான் ப்ராவோவும் கடைசி நேர முக்கிய போட்டிகளிலிருந்து வெளியேறியது முக்கிய காரணமாக இருந்தது.

bravo

- Advertisement -

போதாகுறைக்கு இந்த சீசனில் ப்ராவோ ஓய்வு பெற்ற நிலையில் தீபக் சஹர் மீண்டும் ஒரு சில போட்டிகளுடன் காயமடைந்து பெஞ்சில் அமர்ந்தார். மறுபுறம் கடந்த சீசனில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த முகேஷ் சௌத்ரியும் காயத்தால் வெளியேறியதால் வாய்ப்பு பெற்ற துஷார் தேஷ்பாண்டே ரன்களை வாரி வழங்கி சில வெற்றிகள் பறி போவதற்கு காரணமாக அமைந்தார். அதனால் முதல் 4 போட்டிகளுக்கு பின் வாய்ப்பு பெற்ற இளம் இலங்கை வீரர் மதிசா பதிரனா சிறப்பாக செயல்பட்டு இதுவரை களமிறங்கிய 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை 7.82 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தி வருகிறார்.

அடுத்த ப்ராவோ:
குறிப்பாக முன்னாள் இலங்கை ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை போலவே பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஸ்லிங்கா பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி துல்லியமாக பந்து வீசி டெத் ஓவர்களில் குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுக்கும் அவர் சென்னையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அத்துடன் 2020, 2022 அண்டர் 19 உலக கோப்பையில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ள அவர் 140 – 145 கி.மீ வேகத்தில் வீசுவதால் வரும் காலங்களில் இன்னும் முன்னேற்றமடைந்து மலிங்காவை விட அசத்துவார் என முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் சமீபத்தில் பாராட்டினார்.

Pathirana Yorker

அதனால் கடந்த காலங்களில் மும்பைக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மலிங்காவை போல தங்களுக்கு ஒரு பவுலர் கிடைத்து விட்டதாக சென்னை ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் பொதுவாகவே சாதாரணமாக யாரையும் விரைவில் பாராட்டாத தோனியும் அவரை பற்றி இந்த சீசனில் வெளிப்படையாக பாராட்டியுள்ளார். இந்நிலையில் சென்னையில் காலம் காலமாக வெற்றிகளில் பங்காற்றி வந்த ட்வயன் ப்ராவோ இடத்தை மதிசா பதிரான நிரப்புவார் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக மும்பை அணியில் முன்பிருந்த லசித் மலிங்கா இப்போதிருக்கும் பும்ரா போல சென்னை அணியில் பதிரான நீண்ட காலம் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதற்கு ஒவ்வொரு அணியும் சிறந்த பவுலர்களை தேடுகின்றது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த காலங்களில் மலிங்கா இருந்தார். தற்போது பும்ரா இருக்கிறார்”

irfan-pathan

“அதே போல் 2 கோப்பைகளை வென்ற சீசனங்களில் கொல்கத்தா அணியில் சுனில் நரேன் இருந்தார். அந்த வரிசையில் சென்னை அணியில் பிராவோ இருந்தார். தற்போது அந்த இடத்திற்கு பதிரான வந்துள்ளார். ப்ராவோவுக்கு பதிலாக சென்னை அணியில் அவர் தான் சரியான மாற்று வீரர். குறிப்பாக அவரிடம் தரமான வேகமும் இருக்கிறது”

இதையும் படிங்க:வீடியோ : தரமான சுழலால் ஒரே ஓவரில் 2 தூண்களை சாய்த்த இளம் வீரர் – டெல்லியை வீட்டுக்கு அனுப்பிய பஞ்சாப், ப்ளே வாய்ப்பு உள்ளதா?

“மேலும் உலகிலேயே தங்களது அணியின் விக்கெட் விழுந்தால் சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் இருக்கும் ரசிகர்கள் தான் அதை கொண்டாடுவார்கள். ஏனெனில் அவர்கள் தோனி பேட்டிங் செய்ய வருவதை விரும்புகின்றனர். அங்குள்ள ரசிகர்கள் தங்களது தல வந்து சிக்ஸர்கள் அடிப்பதை பெரிதும் விரும்புகின்றனர்” என்று கூறினார்.

Advertisement