இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு முறையாக துவங்கிய இத்தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எளிதில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
மேலும் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 2 ஆம் தேதி கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி உள்ளது என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் ஒட்டுமொத்தமாக பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆஸ்திரேலிய அணி தற்போது உச்சத்தில் இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பான பந்து வீச்சாளர்களை வைத்திருந்தாலும் திறம்பட செயல்படவில்லை.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் பெரிய இலக்குகளை இந்திய அணியால் வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியவில்லை. மேலும் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்தது.
இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தாலும் வெற்றியை எட்டக்கூடிய அளவிற்கு விளையாட முடியவில்லை. இதனால் மூன்றாவது போட்டியின் மீது எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது என்றாலும் இந்த போட்டியில் ஜெயித்து இந்திய அணி கௌரவத்துடன் தொடரை முடிக்க எதிர்பார்க்கும். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு சிக்கல் ஏற்படும் வகையில் அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது காயம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான மார்னஸ் லாபுசாக்னே கூறுகையில் : கடந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமாக வார்னர் திகழ்ந்திருக்கிறார். அவரது இந்த விலகல் அணிக்கு சற்று பின்னடைவை தந்தாலும் தற்போது நாங்கள் தொடரை கைப்பற்றி விட்டதால் வேறு ஒரு வீரரை அந்த இடத்தில் வைத்து பரிசோதனை செய்ய முடியும்.
அந்த வகையில் இது ஒரு நல்ல வாய்ப்பு என நான் கருதுகிறேன். நிர்வாகம் என்னை துவக்க வீரராக களமிறங்க சொன்னால் எந்தவித தயக்கமுமின்றி களமிறங்குவேன். மேலும் அப்படி விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். அதேவேளையில் ஜோ பர்ன்ஸ் ஒரு நல்ல துவக்க வீரர் அவரும் இந்த இடத்திற்கு வர அதிக வாய்ப்பு உண்டு என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.