இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று 7ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. அதனைத் தொடர்ந்து தற்போது முதலாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மன் கில் 50 ரன்களில் ஆட்டமிழக்க புஜாரா 9 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆரம்பத்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான லாபுஷேன் அவரிடம் வார்த்தை போரில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த கில்லின் கவனத்தைத் திசை திருப்பும் வகையாக அதிக கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்ததை இன்று போட்டியில் பார்க்க முடிந்தது.
மேலும் வர்ணனையாளர்கள் லாபுஷேனின் இந்த செயலை கண்டு அவர் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும்போது பேட்ஸ்மேன்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அவர் தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கும் எதிராக பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் இருவரும் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடினர். ஒரு கட்டத்தில் அவரது வசைபாடல் மைதானத்தில் அதிகமாகியது.
குறிப்பாக கில்லை பார்த்து “உங்களுக்கு பிடித்த ஃபேவரைட் பேட்ஸ்மேன் யார் ? என்று கில்லிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கில் ” போட்டி முடிந்ததும் கூறுகிறேன்” என்று கூறிவிட்டு தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி விளையாடினார். ஆனால் தொடர்ந்து அவரை சீண்டிக்கொண்டே இருந்த லாபுஷேன் சச்சினா ? விராட்டா ? உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று அவரை தொடர்ந்து கேள்விகளால் தாக்கிக் கொண்டே இருந்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Marnus just wants to know who Gill’s favourite player is! 😂 #AUSvIND pic.twitter.com/VvW7MixbQR
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021
மேலும் எப்பொழுதும் ஆஸ்திரேலிய அணியினர் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும்போது இதேபோல் வார்த்தை போரில் ஈடுபட்டு அவர்களைத் திசை திருப்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த தொடரில் இந்த முறையை லாபுஷேன் கையில் எடுத்திருக்கிறார். ஆனால் இந்திய வீரர்களான ரோஹித் மற்றும் கில் ஆகியோர் அவரின் வார்த்தையைக்கூட காதில் போட்டுக்கொள்ளாமல் தங்களது கவனத்தை பேட்டிங்கில் மட்டும் வைத்து சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.