என்னதான் சொல்லுங்க, அங்க விராட் கோலியும் இந்தியாவும் நேர்மைக்கு புறம்பாக நடந்துக்கிட்டாங்க – புதிய புயலை கிளப்பும் ஆஸி வீரர்கள்

Kohli IND vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் தோற்கடித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது. அதே புத்துணர்ச்சியுடன் கத்துக்குட்டியான நெதர்லாந்தை தன்னுடைய 2வது போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. அதனால் குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜொலிக்கும் இந்தியா அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பையும் கிட்டதட்ட உறுதி செய்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் முஹம்மது நவாஸ் கடைசி ஓவரில் இடுப்பளவு வந்த பந்தை சிக்ஸர் அடித்த விராட் கோலி நோ பால் கேட்டதால் நடுவர் நோ பால் வழங்கியது நிறைய சர்ச்சைகளை உண்டாக்கியது. அதை விட அதற்காக வீசப்பட்ட ஃப்ரீ ஹிட் பந்தில் க்ளீன் போல்ட்டான விராட் கோலி அதில் அவுட்டில்லை என்பதை பயன்படுத்தி 3 ரன்கள் எடுத்தது மேலும் சர்ச்சையை உண்டாக்கியது. குறிப்பாக நோ பால் பந்தில் அவுட்டில்லை என்றாலும் பந்து ஸ்டம்ப்பில் பட்டதால் அது டெட் பால் என்று கூறிய பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனாலும் நடுவர் இந்தியாவுக்கு சாதகமான முடிவை எடுத்ததாக விமர்சித்தார்கள்.

- Advertisement -

புதிய புயல்:
ஆனால் ஐசிசி கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டு நடுவர்கள் 3 ரன்களை கொடுத்தது சரியாகவே நடந்து கொண்டார்கள் என்று நேர்மைக்குப் பெயர் போன முன்னாள் நடுவர் மற்றும் புதிய நடுவர்களுக்கு விதிமுறைகளை சொல்லிக் கொடுக்கும் ஐசிசி அகடமியில் பணிபுரியும் சைமன் டௌபல் விளக்கமளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் ஸ்டம்பில் பந்து பட்டு பவுண்டரி நோக்கி சென்றதால் விதிமுறைக்குட்பட்டதாக இருந்தாலும் இந்தியா மற்றும் விராட் கோலி 3 ரன்கள் நேர்மைக்கு புறம்பாக எடுத்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் டைலர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பந்து ஸ்டம்ப்பில் அடித்த தருணத்திலேயே நேர்மைக்கு புறம்பான சாதகத்தை இந்தியா பயன்படுத்திக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் பந்து ஸ்டம்பில் பட்டதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மேலும் அந்த சமயத்தில் எதிரணி வீரர்கள் ரன்களை எடுக்கும் பேட்ஸ்மேன்களை ரன் அவுட் செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் அந்த சமயத்தில் ஏற்கனவே பெய்ல்ஸ் நீக்கப்பட்டு மைதானத்தின் கீழே கிடக்கும். அதனால் எப்படி எதிரணியினர் மீண்டும் அந்த இடத்தில் அவுட் செய்ய முடியும்?”

- Advertisement -

“என்னை பொருத்தவரை ஃபிரீ ஹிட் பந்தில் பேட்ஸ்மேன் போல்ட்டானால் அல்லது கேட்ச் கொடுத்தால் அவுட் கிடையாது. அதே சமயம் அந்தப் பந்தை ரன்கள் எடுக்காத வகையில் டெட் பால் என அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்த இடத்தில் ஏற்கனவே சாதாரணமாக அவுட்டாவதிலிருந்து தப்பி ஒரு சாதகத்தை பயன்படுத்தும் நீங்கள் அதே பந்தில் 2வது முறையாக மீண்டும் ஒரு சாதகத்தை பயன்படுத்துகிறீர்கள்” என்று கூறியதுடன் இந்த விதிமுறையில் ஐசிசி மாற்றம் செய்ய வேண்டுமென பேசினார்.

முன்னதாக இடுப்பளவு வந்ததை 3வது நடுவரிடம் சோதிக்காமல் இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் நடந்து கொண்டதாக தெரிவித்த மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாக் அது ஏன் டெட் பால் இல்லை என்றும் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement