கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கௌஹாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து அபாரமாக விளையாடி 489 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு ஐடன் மார்க்ரம் 38, ரியன் ரிக்கல்டன் 35, ஸ்டப்ஸ் 49, கேப்டன் தெம்பா பவுமா 41 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் டோனி டீ ஜோர்சி 28, வியன் முல்தார் 13 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் 7வது இடத்தில் களமிறங்கிய சீனுரான் முத்துசாமி நங்கூரமாக விளையாடி தன்னுடைய முதல் சதத்தை அடித்து 109 ரன்கள் குவித்து அசத்தினார்.
யான்சென் உலக சாதனை:
அவருடன் இணைந்து விளையாடிய கெய்ல் வெர்ரைன் 45 ரன்கள் குவித்து இந்தியாவை வெறுப்பேற்றும் வகையில் விளையாடினார். அவர்களைக் காட்டிலும் 9வது இடத்தில் களமிறங்கிய மார்க்கோ யான்சன் அதிரடியாக விளையாடினார். கடைசி நேரத்தில் கடுப்பேற்றும் வகையில் 6 பவுண்டரி 7 சிக்ஸரை பறக்க விட்ட அவர் சதத்தை நழுவ விட்டு 93 (91) ரன்னில் அவுட்டானார்.
இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை மார்க்கோ யான்சன் படைத்துள்ளார். இதற்கு முன் 1974 டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவ் ரிச்சர்ட்ஸ் 6 சிக்சர்கள் அடித்துள்ளார். 2001 சென்னை டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடன் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இந்தியா திருப்பி அடிக்குமா:
தற்போது அவர்கள் இருவரையும் முந்தியுள்ள யான்சன் புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு எதிராக 9வது இடத்தில் களமிறங்கி 2வது அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையையும் யான்சென் படைத்துள்ளார். அந்த சாதனைப் பட்டியலில் அவருக்கு முன்பாக 2013 மொஹாலி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் 99 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: பார்வையற்றோர் மகளிர் டி20 உ.கோ: 117 ரன்ஸ்.. 7க்கு 7.. ஃபைனலில் வென்ற இந்திய அணி
இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் 4, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடும் இந்தியா 2வது நாளின் முடிவில் 9/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜெய்ஸ்வால் 7*, ராகுல் 2* ரன்களுடன் உள்ளார்கள். தற்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவை விட இந்திய அணி பின்தங்கியுள்ளது.



