இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். பயிற்சியாளராக வந்தது முதல் அவர் சில வீரர்களுக்கு ஒருதலைபட்சமாக ஆதரவுகளை வழங்கி வருவது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 வருடங்கள் கழித்து வெல்வதற்கு ஹர்ஷித் ராணா முக்கிய பங்காற்றினார்.
அந்த ஒரே காரணத்திற்காக இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தது முதல் கௌதம் கம்பீர் அவருக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் இதுவரை மனதில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ராணா பெரியளவில் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றவில்லை. மறுபுறம் 2024 டி20 உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
ராணாவுக்கு மாமன் கிடையாது:
ஆனால் 8வது இடத்தில் விளையாடும் பவுலருக்கு பேட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவரை கம்பீர் அவ்வப்போது பெஞ்சில் அமர வைக்கிறார். மறுபுறம் இதுவரை கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் ராணா 8வது இடத்தில் பேட்டிங்கில் இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு அசத்தவில்லை. அப்படி நியாயமற்ற காரணத்துக்காக ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் பலரும் கெளதம் கம்பீர் முடிவை விமர்சிக்கிறார்கள்.
குறிப்பாக எதற்காக ராணா இந்திய அணியில் இருக்கிறார்? என்று யாருக்கும் தெரியாது என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்தார். அத்துடன் கம்பீருக்கு ஆமாம் போடுபவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார். அதைப் பற்றி கேட்டதற்கு 23 வயது குழந்தை ராணாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று கம்பீர் பதிலடி கொடுத்தார்.
பிஸ்லா ஆதரவு:
அத்துடன் தம்மை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், ராணா போன்ற வீரர்களை விமர்சிக்காதீர்கள் என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திறமையின்றி இலவசமாக வாய்ப்புகளை வழங்குவதற்கு கௌதம் கம்பீர் ஒன்றும் ராணாவின் மாமன் கிடையாது என்று முன்னாள் கொல்கத்தா வீரர் மன்விந்தர் பிஸ்லா தெரிவித்துள்ளார். மேலும் கொல்கத்தா அணியிலிருந்து வந்தவர் என்பதற்காகவே ராணாவை பிடிக்காத எதிரணி ரசிகர்கள் விமர்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2026: விராட் மாதிரி எப்போதும் 800 அடிக்காத ரோஹித்.. இம்முறை இதை குறி வைப்பாரு.. ஃகைப் பேட்டி
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ராணாவுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை எதிர்ப்பவர்கள் நிச்சயமாக கொல்கத்தா ரசிகர்கள் அல்லாதவர்களாக இருப்பார்கள். இதை நான் நேர்மையுடன் சொல்கிறேன். நீங்கள் நினைப்பது போல் வாய்ப்புகளை வழங்க கெளதம் கம்பீர் ஒன்றும் அவருடைய மாமன் அல்லது நெருக்கமானவர் கிடையாது” என்று கூறினார்.



