இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் தாங்கள் தான் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
ஆனால் அந்த பிட்ச்சில் இந்திய அணியினர் நன்றாக பேட்டிங் செய்யத் தவறியதே தோல்விக்கு காரணமானதாகவும் கம்பீர் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் கடந்த நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியைச் சந்தித்துள்ளது.
கம்பீர் தான் கத்துகொடுக்கனும்:
இந்நிலையில் கொல்கத்தாவில் சந்தித்த தோல்விக்கு இந்திய வீரர்களை மட்டும் குறை சொல்லக்கூடாது என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். மேலும் சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளத் தெரிந்த கௌதம் கம்பீர் இந்திய வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர குறை சொல்லக்கூடாது என்றும் திவாரி கூறியுள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற விரும்பிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்த கம்பீர் வீட்டுக்கு அனுப்பியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி மனோஜ் திவாரி பேசியது பின்வருமாறு. “இந்திய அணி அடுத்த தலைமுறையை நோக்கிய மாற்றத்தில் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றம் என்பது நியூசிலாந்து, ஜிம்பாப்பே ஆகிய அணிகளுக்கு தான் தேவை. நமக்குத் தேவையில்லை. ஏனெனில் நம்முடைய உள்ளூர் கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கிடக்கிறார்கள்”
திவாரி விமர்சனம்:
“ஆனால் இந்த தேவையற்ற மாற்றத்தின் காரணமாக விராட், ரோஹித் போன்ற நமது நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி அதன் புனிதத்தை பாதுகாக்க விரும்பினார்கள். ஆனால் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக அவர்கள் மெதுவாக பின் வாங்கிச் சென்றனர். கொல்கத்தாவில் சந்தித்த தோல்விக்காக நீங்கள் வீரர்களின் டெக்னிக்கை குறை சொல்ல முடியாது”
இதையும் படிங்க: முதுகில் குத்தாமல் அன்பைக் கொடுத்த இந்தியாவின்.. இதயத்தில் நானும் இருக்கேன்.. கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி
“ஒரு பயிற்சியாளராக வீரர்களுக்கு கற்றுக் கொடுப்பது தான் உங்களுடைய வேலையே தவிர அவர்களை குறை சொல்வது அல்ல. ஒருவேளை நம்முடைய பேட்ஸ்மேன்களிடம் வலுவான தடுப்பாட்டம் இல்லை என்றால், ஏன் போட்டிக்கு முன் நாம் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்தவில்லை? கௌதம் கம்பீர் விளையாடிய நாட்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறந்த வீரராக அறியப்பட்டார். எனவே அவர் நம்முடைய வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.



