
இந்திய கிரிக்கெட் அணி கௌதம் கம்பீர் வந்தது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2012 முதல் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டது. அதற்கு விராட் கோலி தலைமையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்றே சொல்லலாம்.
அந்த சூழ்நிலையில் கடந்த 2024 நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பை கொடுத்தார். அந்த வாய்ப்பில் அஸ்வினை காட்டிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய சுந்தர் அதிக விக்கெட்டுகளை எடுத்தார். அதையே சாக்காக வைத்து அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் அஸ்வினை பெஞ்சில் அமர வைத்த அவர் சுந்தரை விளையாட வைத்தார்.
அதற்கு முன்பாகவே 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட வெளிநாடுகளில் இந்திய அணி அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே அதையும் கருத்தில் கொண்டு சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு வழி விட்ட அஸ்வின் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மறுபுறம் நியூசிலாந்து தொடரில் ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்த இந்திய அணி ஆஸ்திரேலியாவிலும் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்றது.
அந்த 2 தோல்விகளுக்கும் பேட்டிங்கில் விராட், ரோஹித் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமானது. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர்கள் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுப்பதற்காக பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருந்தனர். ஆனால் அப்போது அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின.
அதற்கு முன் அவர்களாகவே ஓய்வு பெற்ற நிலையில் இளம் இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தது. ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவிடம் 25 வருடங்கள் கழித்து தோற்றுள்ளது. இந்நிலையில் 2024இல் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்த கௌதம் கம்பீர் தான் வலுக்கட்டாயமாக அஸ்வினை ஓய்வு பெற வைத்ததாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். அதே போல விராட், ரோஹித் டெஸ்ட் கேரியர் முடிவதற்கும் கம்பீர் முக்கிய காரணமானதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாஷிங்டன் சுந்தரை வெளியிலிருந்து கொண்டு வந்த நீங்கள் அஸ்வினை பாதுகாப்பின்மையை உணர வைத்தீர்கள். அது இனிமேலும் நீங்கள் அஸ்வினை நம்பவில்லை என்பதற்கான அறிகுறியாகும். அப்படி நீங்கள் அசௌகரியமாக உணர வைத்ததாலேயே அஸ்வின் ஆஸ்திரேலியாவில் ஓய்வு பெற்றார்”
இதையும் படிங்க: விராட், ரோஹித் இருந்தா மட்டும் இந்தியா ஜெய்ச்சுருமா? அதை மறந்துட்டு பேசாதீங்க.. கவாஸ்கர் பேட்டி
“அதே போல விராட், ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்பினார்கள். துரதிஷ்டவசமாக அவர்களைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகளால் அவர்களும் குட்பை சொன்னார்கள். இது போல நீங்கள் தொடர்ச்சியாக செய்தால் எந்த வீரரும் தங்களை அணியில் செட்டிலானவராக உணர மாட்டார்கள்” என்று கூறினார்.