இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் தற்போதைய அணியில் உயர்ந்து விளங்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற தரமான வீரர்களுக்கு தோனி ஆரம்ப காலங்களில் தேவையான வாய்ப்பு கொடுத்து வளர்த்தார்.
அதனால் இந்திய அணியின் வருங்காலத்தையும் தோனி சிறப்பாக கட்டமைத்தார் என்றே சொல்லலாம். அதே காரணத்தால் சேவாக், கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற ஜாம்பவான் வீரர்களை 2011 உலகக் கோப்பைக்கு பின் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டார். அந்த வகையில் 2011 உலகக்கோப்பை முடிந்த பின் சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் மனோஜ் திவாரி சதமடித்து 104* ரன்கள் குவித்தார்.
கேரியரை முடித்த தோனி:
ஆனால் அதன் பின் சீனியர்கள் வந்ததால் கழற்றி விடப்பட்ட அவர் 2015 வரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 287 ரன்களை 26.09 என்ற சராசரியில் மட்டுமே எடுத்தார். அதே போல 3 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு இன்னிங்ஸில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த காலகட்டங்களில் ஐபிஎல் தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அவரை அப்போதைய கேப்டன் தோனி கழற்றி விட்டார்.
இந்நிலையில் இந்தியாவுக்காக சதமடித்து கேரியரின் உச்சத்தில் இருந்த போது தோனி கழற்றி விட்டது தமது தன்னம்பிக்கையை நொறுக்கியதாக மனோஜ் திவாரி மறைமுகமாக கூறியுள்ளார். அப்படி உச்சத்தில் இருந்த போது தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காததாலயே தம்மால் மேற்கொண்டு அசத்த முடியவில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
உச்சத்தில் இருந்தேன்:
“அது நீண்ட வருடங்களுக்கு முன்பாக நடந்தது. அது கடந்த காலம். ஆனால் எனக்குள் அந்த சோகம் இன்னும் மறையவில்லை. அதற்காக நான் சோகமாக இல்லை என்று சொன்னால் அது பொய்யாகும். அதற்காக என்ன செய்ய முடியும்? அதுவே என் வாழ்க்கை. இது முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம். ஒருவேளை நான் என்னுடைய சுயசரிதை எழுதினால் அது பற்றிய முழுமையான விவரங்களை வெளியிடுவேன்”
இதையும் படிங்க: உலகின் 7வது பவுலர்.. நேதன் லையனை முந்திய அஸ்வின்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் உலக சாதனை
“ஆனால் அது எளிதல்ல. பொதுவாக ஒரு வீரர் தனது உச்சத்தில் இருக்கும் போது தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் அவருடைய தன்னம்பிக்கை உடைக்கப்பட்டால் அது அவரின் நிலையை மாற்றும்” என்று கூறினார். இப்படி கடந்த காலங்களில் ஹர்பஜன், யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் ஆகியோரும் தோனியை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.



