இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. முன்னதாக அத்தொடரின் 3வது போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது.
அதற்கு முந்தைய போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. அதனால் 3வது போட்டியில் இந்தியா வென்றிருக்கும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். ஆனால் மூன்றாவது நாள் மாலையில் ஜாக் கிராவ்லியிடம் தேவையின்றி கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதம் செய்தது இங்கிலாந்தை கம்பேக் கொடுக்க வைத்ததாக திவாரி கூறியுள்ளார்.
கோலியை காப்பியடித்து:
ஐபிஎல் தொடரில் குஜராத்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டது முதலே விராட் கோலியை போல சுப்மன் கில் ஆக்ரோசமாக கேப்டனாக தன்னை அடையாளப்படுத்துவதாகவும் திவாரி தெரிவித்துள்ளார். அவருடைய தேவையற்ற ஆக்ரோசமே 2 – 1* என்ற கணக்கில் முன்னிலையில் இருக்க வேண்டிய இந்தியாவை பின்தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கும் திவாரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “கேப்டன் கில் விஷயங்களை செய்த வழி எனக்குப் பிடிக்கவில்லை”
“அவர் கடைசியாக லார்ட்ஸில் விராட் கோலி செய்ததை காப்பியடிக்க முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். அது அவருடைய பேட்டிங்கிற்கு உதவி செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் கேப்டனாக வந்தது முதலே கில் ஆக்ரோஷமான மனநிலையைப் பெறுவதை நான் கண்காணித்து வருகிறேன். அவர் நடுவர்களுடன் தேவையின்றி ஆக்ரோசமாக வாதிட்டார்”
திவாரி சாடல்:
“அது கில் போலவே இல்லை. உண்மையில் அவர் இது போன்ற ஆக்ரோசத்தைக் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலை பின்பற்ற வேண்டும். அதற்காக எப்போதும் நீங்கள் எதிரணிக்கு மோசமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. உண்மையான ஆக்ரோஷம் டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுப்பதில் இருக்க வேண்டும். இந்நேரம் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா எளிதாக முன்னிலையில் இருந்திருக்கும்”
இதையும் படிங்க: அதை மறந்து குல்தீப்புக்காக இந்தியா.. சுந்தரை கழற்றி விட்டா பேலன்ஸ் பழாகிடும்.. ஹார்மிசன் எச்சரிக்கை
“ஆனால் அது போன்ற ஆக்ரோஷம் விளையாட்டுக்கு நல்லதல்ல. குறிப்பாக இந்திய அணியின் கேப்டனிடம் இருந்து அப்படிப்பட்ட ஆக்ரோஷம் வருவது நல்லதல்ல. ஸ்டம்ப் மைக் அருகே நின்று அவர் சொன்ன மோசமான வார்த்தைகள் எனக்குப் பிடிக்கவில்லை. அது முந்தைய கேப்டன் (கோலி) கோபமாக இருந்த போது சொன்னதிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் அது கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்தால் அடுத்த தலைமுறையும் பின்பற்றுவார்கள்” என்று கூறினார்.



