
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூ சண்டிகர் நகரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெடுகளை இழந்து 564 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் சதமும், ரிஷப் பண்ட் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர்.
அதை தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில்152 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 112 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியின் போது மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் மானவ் சுதர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய மானவ் சுதர் கூறியதாவது :
டெஸ்ட் கிரிக்கெட் எளிதான ஒரு போட்டி கிடையாது. உண்மையிலேயே இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இந்திய அணிக்காக நான் விளையாட வேண்டும் என்பதும் அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த வகையில் நான் அறிமுகமாக முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதையும் படிங்க : ஸ்டார்டிங்ல இருந்து எதுவுமே சரியா போகல.. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் – ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி
இந்த போட்டியின் போது நான் பேட்டிங் செய்கையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல கிரிப் இருப்பதை உணர்ந்தேன். அதன் காரணமாக என்னால் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட முடிந்தது என மானவ் சுதர் கூறியது குறிப்பிடத்தக்கது.