
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக 23 வயதான மானவ் சுதர் என்கிற வீரருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் உள்ளூர் போட்டிகளில் அசத்தியதன் மூலம் இந்த வாய்ப்பினை பெற்றிருந்தார்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய மானவ் சுதர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கின் போது 28 ரன்கள் எடுத்து அசத்திருந்தார். அதோடு பந்துவீச்சிலும் முதல் இன்னிங்சில் 6 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் என மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார்.
மேலும் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினை வென்ற ஒன்பதாவது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையும் நிகழ்த்தி இருந்தார். இப்படி தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் அசத்திய அவருக்கு இனி டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் இந்த டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு அவருக்கு மேலும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் பலரும் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்த ஆண்டு வார்விக்ஷையர் என்கிற அணிக்காக விளையாட மானவ் சுதர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு சுற்று போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் தற்போது லண்டனுக்கும் சென்றடைந்துள்ளார்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான சதம்.. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட – சுப்மன் கில்
இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான ஒரு வாரத்திலேயே அவருக்கு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே அந்த அணிக்காக க்ருனால் பாண்டியா, முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகிய இந்திய வீரர்கள் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.