2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மெல்போர்ன் நகரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது ரோகித், ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அப்போது ஹர்திக் பாண்டியாவுடன் கைகோர்த்த விராட் கோலி 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்.
இருப்பினும் கடைசி ஓவரில் 40 ரன்கள் எடுத்த பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் பதற்றமடையாமல் கூலாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அப்படி ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக இந்தியாவை சூப்பர்மேனை போல் அபாரமாக பேட்டிங் செய்து 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து காப்பாற்றிய விராட் கோலி கடந்த வருடம் துபாயில் தமது தலைமையில் உலக கோப்பையில் முதல் முறையாக சந்தித்த வரலாற்று தோல்விக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து பழிக்கு பழி தீர்த்தார் என தாராளமாக சொல்லலாம்.
எல்லா புகழும் கங்குலிக்கே:
ஏனெனில் அந்தளவுக்கு இப்போட்டியில் யாருமே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த அவர் ஹரிஷ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பறக்க விட்ட அந்த 2 சிக்ஸர்களை வைத்து 100க்கு 100% அதே பழைய பன்னீர்செல்வமாக பழைய விராட் கோலியாக பார்முக்கு திரும்பி விட்டார் என்றே கூறலாம். முன்னதாக அறிமுகமான முதல் இப்படி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்ற விமர்சனத்திற்கும் கேப்டனாக உலகக் கோப்பையை வாங்கி தரவில்லை என்ற விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து பணிச்சுமையை நிர்வாகித்து சதமடிப்பதற்காக கடந்த 2021 டி20 கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தாலும் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லாத அவருக்கு பதில் அசால்ட்டாக 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவின. அதனால் ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் இருந்த பிசிசிஐ துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்று வெளியேறிய போது மேலும் அதிருப்தியடைந்தது. அதன் காரணமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற காரணத்தை கையிலெடுத்த பிசிசிஐ விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் ஷர்மாவிடம் ஒப்படைத்தது.
அப்போது விராட் கோலி டி20 கிரிக்கெட் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். ஆனால் அவ்வாறு தம்மிடம் யாரும் கேட்டுக் கொள்ளவில்லை என்று உண்மையை போட்டுடைத்த விராட் கோலி ஒருநாள் கேப்டன்ஷிப் பதவி பறிப்பது பற்றி ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக மட்டுமே தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்டபோது நேரம் வரும் போது பிசிசிஐ பார்த்துக் கொள்ளும் என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றார்.
இருப்பினும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவை வழி நடத்தும் ஆசையுடன் காத்திருந்த விராட் கோலி அது நடக்காததால் மனமுடைந்து வெளி உலகிற்கு பணிச்சுமை என்பதை காரணமாகக் காட்டி வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக இருந்தும் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மொத்தத்தில் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி பறிபோனதற்கு கங்குலி தான் காரணமென்பதை அவரது ரசிகர்கள் அந்த சமயத்திலேயே ஆதாரங்களுடன் நிரூபித்தனர்.
இந்நிலையில் வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்த விராட் கோலியை அனைவரும் பாராட்டும் நிலையில் கங்குலி மட்டும் தனது ட்விட்டரில் இந்தியாவை பாராட்டியுள்ளார். அதை பார்க்கும் அவரது ரசிகர்கள் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை தற்போது எங்களுடைய கிங் கோலி முழு பார்முக்கு திரும்ப நீங்கள்தான் காரணமென்று நன்றி தெரிவிக்கிறார்கள். அத்துடன் அன்று விராட் கோலியை அதிரடியாக நீக்கிய நீங்கள் இன்று பிசிசிஐ தலைவர் பதவிலேயே இல்லை என்றும் வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிருபணமாகி விட்டதாகவும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.



