ஸ்கெட்ச் நமக்கில்ல ஆஸ்திரேலியாவுக்கு, தம்மை போலவே பந்து வீசும் வீரரை வைத்து அஷ்வின் போடும் மாஸ்டர் ப்ளான் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. கடந்த 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடந்த 10 வருடங்களாக உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வென்று வரும் இந்தியா இத்தொடரிலும் வென்று ஜூலை மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற போராட உள்ளது. ஆனால் ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா கடந்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க களமிறங்குகிறது.

முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து நவீன கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னராக ஜொலிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே பிக்பேஷ் தொடரின் போது அவரை திறம்பட எதிர்கொள்வதற்கான திட்டத்தை வகுத்து விட்டதாக தெரிவித்த மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்ததும் அஸ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது உலக அளவில் வைரலானது.

- Advertisement -

ஸ்கெட்ச் ஆஸ்திரேலியாவுக்கு:
அதை பார்த்த இந்திய ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்ட்ரேலியா இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டதை பார்த்து வியந்தார்கள். இந்நிலையில் பெங்களூருவில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பந்து வீசிய மகேஷ் பிதியா நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் நெட் பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடன் பயணித்து நாக்பூர் சென்றடைந்துள்ள அவர் தன்னுடைய ரோல் மாடலான அஷ்வினை முதல் முறையாக நேரில் பார்த்து அவரது காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக பந்து வீசியதை பற்றி அஷ்வின் கேட்டிருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இன்று என்னுடைய குருவின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளேன். நான் எப்போதும் அவரைப் போலவே பந்து வீச விரும்புகிறேன். இன்று முதல் முறையாக வலைப்பயிற்சிக்கு முன் அவரை நான் பார்த்த போது அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டேன். அப்போது என்னை கட்டியணைத்த அவர் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எதிராக எப்படி பந்து வீசினேன் என்பதை பற்றி கேட்டார். விராட் கோலியும் என்னை பார்த்து சிரித்து தம்ப்ஸ் அப் காட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்”

- Advertisement -

“மேலும் வலைப்பயிற்சியின் போது முதல் நாளிலேயே ஸ்டீவ் ஸ்மித்தை நான் 5 – 6 முறை அவுட்டாக்கினேன். ஆஸ்திரேலிய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மிகவும் சிறந்த தருணமாக அமைந்தது. அந்த சமயத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக பந்து வீசுவதே என்னுடைய முதன்மை வேலையாக இருந்தது. இருப்பினும் இப்படித்தான் வீச வேண்டும் என்பது போல் எதுவும் அவர் என்னிடம் சொல்லவில்லை. மேலும் நேதன் லயன் நான் பந்தை எப்படி பிடித்து வீசுகிறேன் என்பதை காட்டுமாறு கேட்டுக் கொண்டார்”

“அவர் என்னுடைய கைவிரல்களின் செயல்பாடுகளையும் கவனித்தார். அதை பார்த்து விட்டு எப்படி என்னால் மேலும் பந்தை சுழற்ற முடியும் முதல் காலை எப்படி தரையில் பதிக்க வேண்டும் என்பதை அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார். மேலும் அவர் எனது திறமை மீது நம்பிக்கை கொண்டார். என்னுடைய கேரியரை ரஞ்சி கோப்பையில் துவங்கியுள்ள நான் ஐபிஎல் தொடரை பற்றி கவலைப்படாமல் பரோடா அணியில் நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியை கொண்டுள்ளேன். கேரம் அல்லது தூஷ்ரா போன்ற பந்துகளை வீசாமல் எனது ஸ்டைலில் வரும் பந்துகளை வீசி வருகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: மூக்கு உடைந்தும் சிக்ஸர் அடிக்குமாறு சொன்ன ரசிகை, இந்திய ரசிகர்களுக்கு நிகர் உலகில் யாருமில்ல – கெயில் நெகிழ்ச்சி

இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “ஸ்கெட்ச் இந்தியாவுக்கு அல்ல ஆஸ்திரேலியாவுக்கு” என்பது போல் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக எப்படி பந்து வீசினார் என்பதை இளம் ஸ்பின்னரிடம் கேட்டறிந்த அஷ்வின் அதற்கு தகுந்தார் போல் மாஸ்டர் பிளான் போட்டு இத்தொடரில் அசத்தப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

Advertisement