இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தார். 36 வயதாகும் விராட் கோலி இன்றளவும் பிட்னஸில் மிகச் சிறப்பாக இருந்து வரும் வேளையில் நிச்சயம் அவரால் இன்னும் ஒரு சில ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும்.
விராட் கோலிக்கு வேண்டுகோள் வைத்த மதன் லால் :
ஆனால் கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் எவ்வாறு திடீர் ஓய்வினை அறிவித்தாரோ அதேபோன்று டெஸ்ட் போட்டியில் இருந்தும் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருந்து ஏமாற்றம் அளித்திருந்தார். முதல் முறையாக விராட் கோலி இல்லாமல் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு அவர் இல்லாத குறையை உணர்ந்து வருகிறது.
ஏனெனில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் மீண்டும் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக விராட் கோலி ஓய்வு முடிவை வாபஸ் பெற்று மீண்டும் திரும்பி வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று பிரபலங்கள் சிலரும் அவரை கம்பேக் கொடுக்கும்படி வேண்டுகோள் வைத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரான மதன் லால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா அடைந்து தோல்விக்கு பின்னர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் விதமாக மீண்டும் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
விராட் கோலி கிரிக்கெட்டின் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை அனைவருமே பார்த்துள்ளோம். கிரிக்கெட் மீது இருக்கும் அவரது ஆர்வத்தை எதிலும் ஒப்பிட முடியாது. என்னை பொறுத்தவரை அவர் ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இந்த தொடரில் இல்லாவிட்டாலும் அடுத்த தொடரிலாவது அவர் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இதையும் படிங்க : இங்கிலாந்திடம் ஒரு வீக்னஸ் இருக்கு.. அதுக்காகவே சாய் சுதர்சனை கொண்டுவரனும் – இர்பான் பதான் ஆதரவு
ஏனெனில் விராட் கோலியால் நிச்சயம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும். அவரது அனுபவத்தை இளம் வீரர்களுக்கு வழங்கிவிட்டு அதன்பிறகு அவர் வெளியேறலாம். எனவே இப்போது கூட ஒன்றும் தாமதமாகவில்லை ப்ளீஸ் தயவு செய்து திரும்பி வாருங்கள் என விராட் கோலிக்கு மதன்லால் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



