- Advertisement -
உலக கிரிக்கெட்

4 ஓவர்ஸ் 4 மெய்டன் 0 ரன்ஸ்.. யாராலும் உடைக்க முடியாத 2 உலக சாதனை படைத்த பெர்குசன்.. ரசிகர்கள் ஆச்சர்யம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 17ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ட்ரினிடாட் நகரில் 39வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த 2 அணிகளுமே லீக் சுற்றுடன் ஏற்கனவே வெளியேறி விட்டன.

எனவே சம்பிரதாயத்துக்காக மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பப்புவா அணி ஆரம்பம் முதலே திணறலாக விளையாடியது. குறிப்பாக ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதீ உள்ளிட்ட நியூசிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்து வீசியினர்.

- Advertisement -

வேற லெவல் சாதனை:
அதிலும் குறிப்பாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் ஒரு ரன் கூட கொடுக்காமல் மிகவும் துல்லியமாக பந்து வீசினார். அதன் காரணமாக ரன்கள் எடுப்பதற்கு திண்டாடிய பப்புவா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவரில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக சார்லஸ் அமினி 17, நார்மன் வனுவா 14 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3, ட்ரெண்ட் போல்ட் 2, டிம் சௌதீ 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக லாக்கி பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி 1 ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 1 ரன் கூட கொடுக்காமல் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசிய முதல் வீரர் என்ற அரிதான உலக சாதனையை அவர் படைத்தார்.

- Advertisement -

அத்துடன் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த எக்கனாமியை (3 விக்கெட்டுகள் 0 எக்கனாமி) பதிவு செய்த பவுலர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் டிம் சௌதீ 4 ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்ததே (1 எக்கனாமி) முந்தைய சாதனையாகும். அந்த வகையில் இந்த 2 சாதனையை எவராலும் எப்போதும் உடைக்க முடியாது என்று சொல்லலாம். ஏனெனில் வருங்காலங்களில் வேறு வீரர்கள் இதை சமன் செய்யலாம்.

இதையும் படிங்க: ஆஹா முழுசா தோனியாக மாறிய ருதுராஜ் கெய்க்வாட்.. புதிய அவதாரத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆனால் உலகக் கோப்பையில் 4 ஓவரில் 4 மெய்டன் வீசி 1 ரன் கூட கொடுக்காத முதல் வீரராக பெர்குசன் மட்டுமே வரலாற்றில் இடம் பெறுவார். அது போக ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 1 ரன் கூட கொடுக்காமல் 4 மெய்டன் ஓவர்களை வீசிய பவுலர் என்ற உலக சாதனையும் லாக்கி பெர்குசன் சமன் செய்தார். இதற்கு முன் 2021இல் பனாமா அணிக்கு எதிராக கனடாவின் சாத் ஃபின் ஜாபரும் இந்த சாதனையை செய்துள்ளார்.

- Advertisement -