AUS vs ZIM : அன்று ஷூ இல்லாமல் தவித்த வீரர் – இன்று ஜிம்பாப்வேயின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டு படைத்த சாதனைகளின் பட்டியல்

Ryan Burl ZIm
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஜிம்பாப்வே பலவீனமான என்பதால் இத்தொடரில் ஆஸ்திரேலியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல் டவுட்ஸ்வில் நகரில் ஆகஸ்ட் 28, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் அசத்தலாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலைமையில் செப்டம்பர் 3ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய ஜிம்பாப்வே உலகையே ஆச்சரியப்பட வைத்தது.

ஏனெனில் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் 5, ஸ்டீவ் ஸ்மித் 1, அலெக்ஸ் கேரி 4, ஸ்டோனிஸ் 3 என உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் ஜிம்பாப்வேயின் தரமான பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றனர். அந்த சமயத்தில் வந்த ஜிம்பாப்வேயின் ஆல்-ரவுண்டர் ரியான் புர்ள் சரவெடியாக பேட்டிங் செய்யக்கூடிய கிளேன் மேக்ஸ்வெல் 12 ரன்களிலும், அஷ்டன் அகரை 0 டக் அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

ரியனின் மாயஜாலம்:
ஆனாலும் மறுபுறம் தொடக்க வீரராக நங்கூரத்தை போட்டு 14 பவுண்டரி 2 சிக்சருடன் 94 ரன்கள் எடுத்து போராடிய நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னரையும் சதமடிக்க விடாமல் அவுட் செய்த அவர் மிட்செல் ஸ்டார்க் 2, ஹேசல்வுட் 0 என டெயில் எண்டர்களையும் அவுட்டாக்கி மொத்த கதையையும் முடித்தார். அதனால் 31 ஓவர்களில் ஆல்-அவுட்டான ஆஸ்திரேலியா வெறும் 141 ரன்களுக்கு சுருண்டது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக  ரியான் புர்ள் 5 விக்கெட்டுகளையும் பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அப்போது கூட ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் நிச்சயம் வெல்லும் எதிர்பார்த்த அந்நாட்டு ரசிகர்களுக்கு உயிரைக் கொடுத்துப் போராடிய ஜிம்பாவே கடும் சவால் கொடுத்தது. சீன் வில்லியம்ஸ் 0, சிகந்தர் ராசா 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கைதினோ 19, மருமணி 35, முன்யோங்கா 17, கேப்டன் சகப்வா 37* என இதர முக்கிய வீரர்கள் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி கணிசமான ரன்களை எடுத்து 39 ஓவேரில் 142/7 ரன்களை எடுக்க வைத்தனர்.

- Advertisement -

அதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஜிம்பாப்வே ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் போட்டியில் வென்று புதிய வரலாறு படைத்தது. இதை பார்த்த ரசிகர்களுக்கு 90களில் இதேபோல் ஆஸ்திரேலியாவை அசால்டாக அலறவிட்ட ஜிம்பாப்வே அணி கண்முன்னே வந்து போன நிலையில் இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய ரியான் புர்ள் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஷூ – சாதனைகள்:
ஒரு காலத்தில் தரமான அணியாக இருந்த ஜிம்பாப்வே இன்று கத்துக்குட்டியாக மாறிப் போனதற்கு அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக “நல்ல ஷூ இல்லாமல் ஒவ்வொரு போட்டிக்கும் பின்பும் பசை போட்டு ஒட்டி கொண்டு விளையாடும் எங்களுக்கு யாராவது ஸ்பான்சர் செய்வீர்களா” என்று கண்கலங்கி கேட்ட இதே ரியான் புர்ள்’க்கு பிரபலமான நிறுவனம் தாமாக முன்வந்து உதவி செய்தது.

- Advertisement -

அதை பயன்படுத்தி ஒரு வருட காலத்திற்குள் இன்று இந்த சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரியன் புர்ள் இப்போட்டியில் படைத்த வரலாற்றுச் சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஜிம்பாப்வே பவுலர் என்ற வரலாறு படைத்தார். இதற்கு முன் 1983இல் முன்னாள் வீரர் டங்கன் பிளட்சர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

- Advertisement -

2. ஆச்சரியப்படும் வகையில் வெறும் 3 ஓவரில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவரில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரியான் புர்ள் : 3.0, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*
2. கோர்ட்னி வால்ஷ் : 4.3, இலங்கைக்கு எதிராக, 1986
3. ஸ்டுவர்ட் பின்னி : 4.4, வங்கதேசத்துக்கு எதிராக, 2014

3.  இப்போட்டியில் 3 கேட்ச்களையும் பிடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளையும் 3 கேட்ச்களை பிடித்த 3வது வீரர் என்ற பெருமையை ஜோயல் கார்னர் (1987, இங்கிலாந்துக்கு எதிராக) ஹர்பஜன்சிங் (2002, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்குப்பின் பெற்றுள்ளார்.

4. அதைவிட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையும் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ரியான புர்ள் : 5/10, 2022*
2. ரவி சாஸ்திரி : 5/15, 1991
3. கர்ட்லி ஆம்ப்ரோஸ் : 5/17, 1998

முன்னதாக சில வாரங்களுக்கு வங்கதேசத்துக்கு எதிராக ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி சாதனையுடன் டி20 தொடரை வெல்வதற்கும் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement