வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாயப் போட்டியில் களமிறங்கி சரவெடியாக செயல்பட்டு 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்தது. குறிப்பாக ஷிகர் தவான் 3 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 2வது விக்கெட்டுக்கு நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிசான் இரட்டை சதமடித்து 24 பவுண்டரி 10 சிக்சருடன் 210 (131) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 11 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 113 (91) ரன்களும் விளாசினர்.

1. முன்னதாக வங்கதேச மண்ணில் முதல் முறையாக களமிறங்கிய இஷான் கிசான் முதல் போட்டியிலேயே சதமடித்தார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச மண்ணில் களமிறங்கிய அறிமுக போட்டியிலேயே சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங்கிற்கு (2003) பின் பெற்றார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் (24 வருடம் 145 நாட்கள்) 150+ ரன்களை அடித்த இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
2. அதை விட 103 பந்துகளிலேயே 150 ரன்களை தொட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 103 பந்துகள், வங்கதேசத்துக்கு எதிராக, 2022*
2. விரேந்தர் சேவாக் : 112 பந்துகள், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2011
3. ரோஹித் சர்மா : 117 பந்துகள், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018

3. அது போக இப்போட்டியில் 10 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சௌரவ் கங்குலியின் 22 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 10 சிக்ஸர்கள், சட்டோகிராம், 2022*
2. சௌரவ் கங்குலி : 7 சிக்ஸர்கள், தக்கா, 2000
4. அத்துடன் 24 வருடம் 145 நாட்களிலேயே இரட்டை சதமடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை ரோகித் சர்மா 26 வருடம் 186 நாட்களில் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

5. அதை விட வெறும் 126 பந்துகளில் இரட்டை சதமடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதி வேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 126 பந்துகள், வங்கதேசத்துக்கு எதிராக, 2022*
2. கிறிஸ் கெயில் : 138 பந்துகள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2015
3. வீரேந்திர சேவாக் : 140 பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2011
6. அத்துடன் 210 ரன்கள் விளாசிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற புதிய சரித்திர சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 210, சட்டக்கிரோம், 2022
2. வீரேந்தர் சேவாக் : 175, மிர்பூர், 2011
3. ரோஹித் சர்மா : 137, மெல்போர்ன், 2015

7. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஷேன் வாட்சனின் சாதனையும் தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 210, 2022*
2. ஷேன் வாட்சன் : 185, 2011
3. விராட் கோலி : 183, 2012
8. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தையே இரட்டை சதமாக அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் தங்களுடைய முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றியதில்லை.
இதையும் படிங்க: 210 ரன்னுல அவுட் ஆனதும் தான் நான் மிஸ் பண்ண அந்த விஷயம் எனக்கே தெரிஞ்சது – இஷான் கிஷன் பேட்டி
9. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற இரட்டை சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 210, வங்கதேசத்துக்கு எதிராக, சட்டகிரோம், 2022
2. சௌரவ் கங்குலி : 183, இலங்கைக்கு எதிராக, டவுன்டன், 1999
3. விராட் கோலி : 183, பாகிஸ்தானுக்கு எதிராக, மிர்பூர் , 2012



