வரலாற்றில் ஆசிய கோப்பையை வென்று இந்தியாவை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்த கேப்டன்களின் பட்டியல் இதோ

- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15வது முறையாக வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.  உலக கிரிக்கெட்டின் சாம்பியனை உலக கோப்பையை வைத்து தீர்மானிப்பது போல ஆசிய கண்டத்தின் டாப் அணிகளாக திகழும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளில் யார் சிறந்தவர் என்பதை தீர்மானிக்கும் வகையில் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த ஆசிய கோப்பையை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வகிக்கும் இந்த தொடர் 2 வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதனால் இந்த தொடரில் முழுமூச்சுடன் விளையாடி கோப்பையை வெல்வதற்கு வீரர்கள் போராடுவதை போலவே அவ்வப்போது அந்தந்த நாட்டு வாரியங்களும் மல்லுக்கட்டியுள்ளன. ஆம் இலங்கையுடனான உறவு சரியாக அமையாத காரணத்தால் கடந்த 1986இல் நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்தியா புறக்கணித்தது. அதேபோல் இந்தியாவுடன் ஏற்பட்ட பகையால் கடந்த 1991 ஆசிய கோப்பையை பாகிஸ்தான் புறக்கணித்தது. 1993 ஆசிய கோப்பையை அனைத்து அணிகளும் சேர்ந்து புறக்கணித்ததால் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

இந்திய கேப்டன்கள்:
அப்படி நிறைய வரலாற்று தருணங்களும் பரபரப்பான போட்டிகளும் நிறைந்த ஆசிய கோப்பையில் இதுவரை நடைபெற்ற 14 தொடர்களில் 7 முறை வென்ற இந்தியா வெற்றிகரமாக அணியாக திகழ்கிறது. அந்த 7 தொடர்களை வென்ற இந்திய கேப்டன்களைப் பற்றி பார்ப்போம்:

1. சுனில் கவாஸ்கர்: 1984இல் முதல் முறையாக துவங்கப்பட்ட ஆசிய கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது. வெறும் 3 அணிகள் 3 போட்டிகளில் மட்டுமே மோதிய அந்த தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா 2 – 1 என்ற கணக்கில் முதல் ஆசிய கோப்பையை வென்றது. அதனால் ஆசிய கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை சுனில் கவாஸ்கர் பெற்றார்.

- Advertisement -

2. திலிப் வெங்சர்க்கார்: கடந்த 1988இல் வங்கதேசத்தில் நடைபெற்ற 3வது ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியாவும் இலங்கையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

அதன்பின் டாக்காவில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் இலங்கை நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை நவ்ஜோட் சித்து 76 ரன்களும் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் 50* ரன்களும் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். அத்தொடரில் கேப்டனாக இந்தியாவை வழி நடத்திய திலிப் வெங்சர்க்கார் 2வது முறையாக ஆசிய கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

3. முஹம்மது அசாருதீன்: கடந்த 1990/91இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் முகமது அசாருதீன் தலைமையில் களமிறங்கிய இந்தியா கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மீண்டும் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

அப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 205 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 75* ரன்கள் எடுக்க 54* ரன்கள் குவித்த கேப்டன் முகமது அசாருதீன் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவுக்கு 3வது ஆசிய கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

4. முகமத் அசாருதீன்: 1993 ஆசிய கோப்பையில் பங்கேற்காத இந்தியா 1995இல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற தொடரில் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் மீண்டும் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 4-வது ஆசிய கோப்பையை வென்றது.

அந்த தொடரிலும் தலைமை தாங்கிய முகமது அசாருதீன் பைனலில் இலங்கை நிர்ணயித்த 230 ரன்களை சேசிங் செய்யும் போது 90* (89) ரன்கள் குவித்து மீண்டும் ஆட்டநாயகன் விருது வென்று 2 ஆசிய கோப்பைகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்தார்.

5. எம்எஸ் தோனி: 1997, 2000, 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த 4 ஆசிய கோப்பைகளில் வெறுங்கையுடன் திரும்பிய இந்தியா கடந்த 2010இல் நம்பிக்கை நாயகனாக அவதரித்த எம்எஸ் தோனியின் தலைமையில் இலங்கை மண்ணில் களமிறங்கியது.

லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு 2வது இடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 5வது ஆசிய கோப்பையை வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 268 ரன்களை குவிக்க 66 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

6. எம்எஸ் தோனி: கடந்த 2016இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் எம்எஸ் தோனி களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் 4 போட்டிகளிலும் வெற்றியை சுவைத்து இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதல் முறையாக 20 ஓவர் தொடராக நடைபெற்ற அந்தப் தொடரின் ஃபைனலில் வங்கதேசம் நிர்ணயித்த 121 ரன்களை துரத்தும் போது 60 (44) ரன்கள் எடுத்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் ஆசிய கோப்பையை 2வது முறையாக வென்ற 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி படைத்தார்.

7. ரோஹித் சர்மா: கடைசியாக கடந்த 2018இல் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றிலும் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து நடைபெற்ற ஃபைனலில் வங்கதேசம் நிர்ணயித்த 223 ரன்களை எளிதாக எட்டிப்பிடித்த இந்தியா 7வது முறையாக ஆசிய கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்று இந்த வருடம் நடப்பு சாம்பியனாக களமிறங்க உள்ளது.

Advertisement