ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்தியா 2 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவில்லை.
அந்தத் சூழ்நிலையில் ரோஹித் சர்மாவின் இடத்தில் வாய்ப்பு பெற்ற அபிஷேக் ஷர்மா இரண்டாவது போட்டியில் அடித்து நொறுக்கி சதமடித்தார். அதனால் ரோஹித் சர்மாவை போல இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா கிடைத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். அதே போல விராட் கோலி பல வருடங்களாக ராஜாங்கம் நடத்திய 3வது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பு பெற்றார்.
ரொம்ப கஷ்டம்:
அந்த வாய்ப்பில் 2வது போட்டியில் விராட் கோலியை போலவே ஆரம்பத்தில் நங்கூரமாக விளையாடிய ருதுராஜ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக பேட்டிங் செய்து 77* ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்திய டி20 அணியில் விராட் கோலியின் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அது மிகவும் சவாலான காரியம் என்று ருதுராஜ் கூறியுள்ளார்.
அது சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனியின் இடத்தை நிரப்புவது போல கடினம் என்றும் ருதுராஜ் தெரிவித்துள்ளார். அதே சமயம் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதை பற்றி தாம் சிந்திக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உண்மையில் அது மிகப்பெரிய தலைப்பு. இந்தத் தருணத்தில் விராட் கோலியுடன் ஒப்பிடுவது அல்லது அவருடைய இடத்தை நிரப்ப முயற்சிப்பது பற்றி சிந்திப்பது சரியானதல்ல”
“ஏனெனில் அது மிகவும் கடினம். குறிப்பாக ஐபிஎல் தொடரில் நான் ஏற்கனவே சொன்னது போல அது கிட்டத்தட்ட மஹி பாய் இடத்தை நிரப்புவது போன்றதாகும். பொதுவாக நீங்கள் உங்களுடைய சொந்த கேரியரை துவக்க வேண்டும். உங்களின் சொந்த விளையாட்டை விளையாட வேண்டும். அதற்குத்தான் தற்போது நான் முன்னுரிமை கொடுக்கிறேன். அணி எங்கு விரும்புகிறதோ அங்கே நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்”
இதையும் படிங்க: என்னோட புக்ல இப்போவே அவர் லெஜெண்ட் தான்.. பும்ராவின் பலமே இது தான்.. ரமீஸ் ராஜா பாராட்டு
“அதே சமயம் துவக்க வீரராக விளையாடுவதற்கும் மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஏனெனில் நீங்கள் புதிய பந்தை எதிர்கொள்வீர்கள்” என்று கூறினார். இந்நிலையில் இத்தொடரின் 3வது போட்டி ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ஜெய்ஸ்வால், துபே, சாம்சன் ஆகியோர் வந்துள்ளதால் இந்திய அணியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



