
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடந்த 1971இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தனது கிரிக்கெட் பயணத்தை துவக்கினார். அந்த சமயம் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தனது அதிரடியான ஆட்டத்தால் தனது வசம் வைத்திருந்தது. சொல்லப்போனால் அந்த காலத்தில் பவுன்சர் பந்துகளுக்கு கணக்கும் தடையும் கிடையாது என்பதால் வழக்கமாகவே உடலைத் தாக்கும் வகையில் பந்து வீசக்கூடிய அந்தகாலத்து வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கொஞ்சம் அசந்தாலும் மண்டையை உடைக்கும் அளவுக்கு அசுர வேக பவுன்சர்களை வீசி பேட்ஸ்மேன்களை அவுட் செய்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதுவும் அதன் சொந்த மண்ணில் களமிறங்கி அபாரமாக பேட்டிங் செய்த அவர் 774 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதுவும் ஹெல்மெட் போடாமலேயே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை இன்றும் தன் வசம் வைத்துள்ளார்.
மகத்தான ஜாம்பவான்:
அவருடைய தரத்தை குறிப்பிடுவதற்காகவே மேற்கண்ட வரிகளை பதிவு செய்கிறேன். ஏனெனில் அவர் எதிர்கொண்ட அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு இந்த காலத்தில் கிடையாது. அந்த அளவுக்கு தரமான பவுலர்களை எதிர்கொண்டு உலகிலேயே 10,000 ரன்கள் என்ற இமாலய மைல்கல்லை தொட்ட முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரைப் பார்த்து உத்வேகமடைந்து தனது கையில் பேட்டை எடுத்து 16 வயதில் களமிறங்கி கிட்டத்தட்ட அவர் எதிர்கொண்ட அளவு தரமான பவுலர்களை எதிர்கொண்டு அவரையே மிஞ்சும் அளவுக்கு ரன்களையும் சதங்களையும் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரை லிட்டில் மாஸ்டர் என்று அனைவரும் போற்றுகிறோம்.
ஆனால் இப்போதும் சுனில் கவாஸ்கர் தான் தன்னுடைய ரோல் மாடல் என்று சச்சினே பலமுறை கூறுவார். அந்த வகையில் உண்மையான லிட்டில் மாஸ்டரான சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் வர்ணனையாளராக கடந்த பல வருடங்களாக செயல்பட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் கெளரவம்:
அப்படிப்பட்ட அவருக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற உயரிய கவுரவத்தை ஐசிசி அளித்துள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர்கள் பார்டர் – கவாஸ்கர் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது இங்கிலாந்தில் அவருக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம் இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் புதிதாக பாரத் ஸ்போர்ட்ஸ் மற்றும் கிரிக்கெட் கிளப் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள 5 ஏக்கர் அளவிலான கிரிக்கெட் மைதானத்துக்கு சுனில் கவாஸ்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் 32 வருடங்களாக லீசெஸ்டர் நகரின் உறுப்பினராக செயல்பட்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெய்த் வாஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்த கௌரவத்தை சுனில் கவாஸ்கருக்கு அந்த கிளப் வாரியம் அளித்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அங்குள்ள ஒரு பெவிலியனுக்கு “கவாஸ்கர் கிரௌண்ட்” என்ற பெயருடன் அவரின் மிகப்பெரிய படம் ஓவியமாக வரையப்பட்டுள்ள புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இது பற்றி கெய்த் வாஸ் பேசியது பின்வருமாறு. “எங்களது மைதானத்துக்கு அவரது பெயரை வைக்க கவாஸ்கர் ஒப்புக்கொண்டதில் நாங்கள் பெருமை அடைகிறோம். அவர் தனது மிகச்சிறந்த சாதனை செயல்பாடுகளால் இன்றும் ஜாம்பவானாக வாழ்கிறார். அவர் எங்களைப் பொறுத்தவரை லிட்டில் மாஸ்டர் மட்டும் கிடையாது இந்த விளையாட்டின் மாஸ்டர் அவர். இந்திய மக்கள் தொகை அதிகமுள்ள லீசெஸ்டர் நகருக்கு அவர் வருவது மிகவும் மகிழ்ச்சியாகும். இதனால் பிரிட்டனுடன் கவாஸ்கர் எப்போதும் இணைந்தே இருப்பார்” என்று பாராட்டினார்.
3வது கெளரவம்:
இந்த மிகப்பெரிய கவுரவத்தை ஏற்று அந்த மைதானத்தை திறந்து வைக்க லண்டனில் இருக்கும் சுனில் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “லீசெஸ்டர் நகரில் இருக்கும் மைதானத்துக்கு எனது பெயர் வைக்கப்பட்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். லீசெஸ்டர் நகரில் எப்போதுமே இந்திய கிரிக்கெட்டுக்கு வலுவான ரசிகர்களும் ஆதரவும் உள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் எனக்கு பெரிய கௌரவம் கிடைத்துள்ளது” என்று கூறினார்.
இதன் வாயிலாக ஐரோப்பா நாடுகளில் ஒரு விளையாட்டு மைதானத்துக்கு பெயரிடப்பட்ட முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையையும் கவாஸ்கர் பெற்றுள்ளார். முன்னதாக ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள கென்டுக்கி நகரிலிருக்கும் ஒரு மைதானத்துக்கும் தான்சானியாவில் ஜான்சிபர் நகரிலிருக்கும் ஒரு மைதானத்துக்கும் சுனில் கவாஸ்கரின் பெயரிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 3-வதாக ஒரு மைதானத்துக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்தியயாக்கு பெருமையான ஒன்றாகும்.