எப்படி ஆடனும்னு விராட் கோலிய பார்த்து கத்துக்கோங்க – பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் பாக் வீரர்கள் அறிவுரை

VIrat Kohli IND vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற முக்கிய போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித், ராகுல், சூரியகுமார் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பதற்றத்தில் செய்த தவறை செய்யாத ரவிச்சந்திரன் அஷ்வின் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த அசாத்தியமான வெற்றிக்கு 6 பவுண்டரி 2 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தமது தலைமையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். மேலும் இப்போட்டியில் 2வது ஓவரிலேயே களமிறங்கிய அவர் ஆரம்பத்தில் நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற வைத்து மீண்டுமொரு முறை தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

கோலிய பின்பற்றுங்க:
மறுபுறம் கடைசி நேரங்களில் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்டு அவமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மிடில் ஓவர்களில் எப்படி ஒரு இன்னிங்சை வேகப்படுத்துவது என்பதை விராட் கோலியிடம் இருந்து பார்த்துக் கற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் வீரர் சோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.

Virat Kohli

ஏனெனில் ஒருபுறம் ஷான் மசூட் 52* ரன்களும் இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்த போது 91/2 என்ற நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தானுக்கு சடாப் கான் 5, ஹைதர் அலி 2, நவாஸ் 9 என 3 முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 20 ஓவரில் 159/8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் பவர் ஹிட்டராக இல்லாமலேயே கடைசியில் விராட் கோலி அதிரடி காட்டியதற்கு ஆரம்பத்தில் நங்கூரமிட்டு செட்டிலானதே காரணமென்று தெரிவிக்கும் சோயப் மாலிக் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

‘விராட் கோலியின் சிக்சர்களை பாருங்கள். அவர் பவர் ஹிட்டர் போல கடைசியில் சிக்சரை அடித்தார், ஆனால் அவர் பவர் ஹிட்டர் கிடையாது. இருப்பினும் அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டதால் எந்த பவுலர் எப்படி வீசுவார், பிட்ச் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்துகொண்ட காரணத்தாலேயே அதை அவரால் சாதிக்க முடிந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியில் புதிய பேட்ஸ்மேன்கள் வரும்போது இந்தியா ஷார்ட் மிட் விக்கெட் ஃபீல்டரை வெளியே கொண்டு வந்தது”

“குறிப்பாக ஹைதர் அலி வந்ததுமே கேட்ச் பிடிக்க திட்டம் போட்டு மிட் விக்கெட் பீல்டரை வெளியே அனுப்பி சரியான லென்த்தில் பந்து வீசி விக்கெட் எடுத்தனர். ஆனால் அவர் ஸ்ட்ரைக்கை மாற்றியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் உங்களுக்கு என்ன லென்த் மற்றும் எதிரணி எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அப்படித்தான் நீங்கள் செட்டிலாக வேண்டும்” என்று கூறினார்.

அதே போல் இப்போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பலவீனத்தை இந்தியா அம்பலப்படுத்தியதாக தெரிவிக்கும் மற்றொரு முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் இது அடுத்து வரும் போட்டிகளில் மேலும் கடினத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது. “கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வீரரும் திட்டத்தை வைத்திருப்பார்கள். இப்போட்டியில் ஒருபுறம் ஷான் மசூட் நின்ற நிலையில் எதிர்ப்புறமிருந்த ஹைதர் அலி ஸ்ட்ரைக்கை மாற்றியிருக்க வேண்டும்”

wasimakram

“ஆனால் அதை செய்யாத அவரிடம் திறமை இருந்தும் ஏமாற்றமளிக்கிறது. அவரது ஃபீல்டிங்கும் சுமாராக உள்ளது. ஆசிப் அலியும் தடுமாறுகிறார். குறிப்பாக மித வேகப்பந்து வீச்சாளர் பவுன்சர் வீசும் போது என்ன செய்ய வேண்டுமென்று அவருக்குத் தெரியவில்லை. இந்த போட்டியை பார்த்த இதர அணிகளும் பாகிஸ்தானின் பலவீனத்தை அறிந்து இனிமேல் அவர்களுக்கு எதிராக ஃபுல்லர் லென்த் பந்துகளை வீச மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement