தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்தை வெறும் 149 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் ஃபாலோ ஆன் கொடுக்காமல் களமிறங்கிய இந்திய அணி 287-4 ரன்கள் குவித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
மலிங்காவாக ஷாகிப் அல் ஹஸன்:
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 109, சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 515 ரன்களை துரத்தும் வங்கதேசம் 3வது நாள் முடிவில் 158-4 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. முன்னதாக இப்போட்டியின் 2வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்தார்.
அவருக்கு எதிராக வங்கதேச நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் ஒரு ஓவரை வீசினார். அந்த ஓவரில் பெரும்பாலும் அவர் விராட் கோலியின் கால்களை குறி பார்த்து கிட்டத்தட்ட யார்க்கர் போல வீசினர். அதனால் ஆச்சரியமடைந்த விராட் கோலி ஸ்பின்னரான இவர் என்ன இப்படி யார்க்கர்களாக போடுகிறார் என்று பார்த்தார்.
மலிங்கா பதில்:
அத்துடன் அடுத்த ஓவரின் இடைவெளியில் அருகில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஷாகிப் அல் ஹசனை பார்த்து “நியாமை மல்லி (நைஸ் பிரதர்). நீங்கள் என்ன மலிங்காவா? இப்படி யார்க்கர் மேல் யார்க்கர் மேல் போடுகிறீர்கள்” என்று சிங்கள மற்றும் இந்தி மொழியில் கலந்து சொல்லி விராட் கோலி கலாய்த்தார். அதை கேட்டு சாகிப் அல் ஹசன் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே சிரித்தனர்.
இதையும் படிங்க: ராகுல் டிராவிடுக்கு அடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது இந்திய வீரராக சுப்மன் கில் – நிகழ்த்தியுள்ள சாதனை
அந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோவை பார்த்த லசித் மலிங்கா “நியாமை மல்லி” என்று ட்விட்டரில் பங்கமாக சிரித்து பதிலளித்துள்ளார். அதாவது நியாமை மல்லி என்றால் சிங்களத்தில் “நல்லது சகோதரா” என்ற அர்த்தமாகும். அதை விராட் கோலி சொன்னதை பார்த்து ஆச்சரியப்பட்ட மலிங்கா அதே வார்த்தைகளால் ரியாக்சன் கொடுத்துள்ளார்.



