இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்களை டாஸ் நிகழ்விற்கு பிறகு தெரிவித்த ரஹானே இந்திய அணியில் காயமடைந்த 4 வீரர்களுக்கு பதிலாக அகர்வால், சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.
அதன்படி டாஸ் வென்று இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக நடராஜன், ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது இரண்டாவது நாளில் முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
உணவு இடைவெளிக்கு பின்னர் மழையினால் போட்டி தற்போது சிறிது தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிக ரன்களை குவித்த மார்னஸ் லாபுஷேன் 204 பந்துகளை சந்தித்து 108 ரன்கள் குவித்தார். இந்த சதம் அடித்தது அவருக்கு பாராட்டுகளை தந்தாலும் ஆனால் இந்திய வீரர்கள் செய்த இரண்டு தவறினாலே அவர் இந்த சதம் அடித்தார் என்று ரசிகர்கள் சுட்டி காட்டியுள்ளார்கள்.
அதன்படி 36 ரன்கள் இருந்தபோது சைனி வீசிய பந்தில் ரகானே எளிதான கேட்ச் தவறவிட்டார். அதேபோன்று அரைசதத்தை கடந்த பின்னர் நடராஜன் வீசிய பந்தில் பண்ட் மற்றும் புஜாரா ஆகியோர் இருவரும் இணைந்து ஒரு கேட்ச்யை தவற விட்டனர். இந்த இரண்டு தவறுகளுமே அவர் நேற்று சதம் அடிக்க காரணமாக அமைந்தது என்று ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.